உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த ஐந்து மாநில தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் முழு வீச்சில் தயாராகிவருகின்றன.
இந்தநிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 2016ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த 9 எம்.எல்.ஏக்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒன்பது எம்.எல்.ஏக்களும் அப்போதிருந்த ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து பாஜகவில் இணைந்ததும், 2017 சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
இவர்களைத் தவிர ஹரிஷ் ராவத் அரசில் அமைச்சராக இருந்த ஹரக் சிங் ராவத்தும் பாஜகவிலிருந்து காங்கிரஸுக்கு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, வெளியாகியுள்ள இத்தகவல் குறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, "இது ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. நாங்கள் பெரிய குடும்பம். இதுபோன்ற விஷயங்கள் தொடரும். சமீபத்தில் மூன்று எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். ஒரு கட்சியைவிட்டு வெளியேறி இன்னொரு கட்சியில் இணைவது பெரிய பிரச்சனையல்ல" என கூறியுள்ளார்.
அண்மையில் உத்தரகாண்ட் மாநில போக்குவரத்துத்துறை அமைச்சரான யஷ்பால் ஆர்யா, தனது மகனும் எம்.எல்.ஏவுமான சஞ்சீவோடு கடந்த மாத தொடக்கத்தில் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவில் உள்ள ஒன்பது தலைவர்களும் காங்கிரஸில் இணைந்தால் அது காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்கும் என்றும், பாஜகவிற்குப் பின்னடைவாக அமையும் எனவும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.