
கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே உள்ள ஹுப்பள்ளி நகரைச் சேர்ந்தவர் தொழிலதிபரும், அரசியல் பிரமுகருமான சௌகான். இவரது நான்கு மகன்களுக்கும் திருமணம் முடிந்து மருமகள்கள், பேரக்குழந்தைகள், கொள்ளுப்பேரன்கள் என மொத்தம் 27 பேர் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சௌகானின் மனைவி சாரதாபாய் மூன்று மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். மனைவியின் மறைவுக்கு பிறகு மன உளைச்சலில் இருந்த முதியவர் டி.கே.சவுகானுக்கு, மற்றொரு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, மூன்று மாதங்கள் கழித்து இறந்து போன சாரதாபாயின் மூத்த சகோதரி அனுஷ்யாவை டி.கே.சவுகானுக்கு மணமுடித்து வைத்தனர்.
குடும்பத்தினர்கள் ஒன்றிணைந்து தாத்தா, பாட்டியின் திருமணத்தை கோலாகலமாக நடத்தியுள்ளனர். திருமணத்தில் குடும்பத்தினர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சௌகான், "திருமணம் செய்து கொண்டதற்கான காரணம் என்னவென்றால், மனைவியை இழந்து தனிமையில் உள்ள நபர்களிடம் கேளுங்கள், அதன் வலி என்ன என்று. மனைவி இல்லாமல் வீடு என்பது கிடையாது. திருமணம் வெறும் காதலுக்காக மட்டுமல்ல. அனைத்து விதத்திலும் ஒருவரையொருவர் அரவணைத்துக் கொண்டு உதவியாக இருப்பது. அதன் அடிப்படையில் நான் திருமணம் செய்து கொண்டேன்" எனத் தெரிவித்தார்.