காவிரியில் 72 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக தர தமிழகம் கோரிக்கை!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 4,000 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ வாதத்தை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. காவிரி நீர் தொடர்பான வழக்கில் விசாரணை முடிந்து சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து மாநிலங்களும் எழுத்துப்பூர்வமான வாதத்தை முன்வைக்க அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு 5 தொகுப்புகள் கொண்ட தனது எழுத்துப்பூர்வ இறுதி வாதத்தை தாக்கல் செய்தது. அதில் காவிரி டெல்டாவில் உள்ள நிலத்தடி நீரை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
நடுவர் மன்ற தீர்ப்புப்படி தற்போது ஆண்டுக்கு 197 டிஎம்சி காவிரி நீர் தமிழகத்துக்கு ஒதுக்கப்படுகிறது. இது குறைவான அளவாகும். எனவே காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக 72 டிஎம்சி நீர் ஒதுக்க வேண்டும். நடுவர் மன்றம் ஒதுக்கீடு செய்ததற்கு அதிகமான நீரை கர்நாடகம் தங்கள் மாநிலத்துக்கு எடுத்து கொள்கிறது. கூடுதலாக பயிர்களை பயிரிட்டு அதிகமான நீரை கர்நாடகம் பயன்படுத்தி கொள்கிறது. கர்நாடகவை பொறுத்தவரையில் அங்கு நெற்பயிர் சாகுபடி செய்ய இயலாது என பல்வேறு நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தும் தேவையில்லாமல் கர்நாடகம் நெற்பயிர்களை பயிரிட்டு காவிரி நீரை வீணடிக்கிறது. இவ்வாறு தனது எழுத்துப்பூர்வ வாதத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதே வழக்கில் கர்நாடகமும் தனது எழுத்துப்பூர்வ வாதத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் தமிழகத்துக்கு வழங்கப்படும் நீரில் இருந்து 60 டி.எம்.சி.யை கர்நாடகத்துக்கு தர கோரிக்கை விடுத்துள்ளது. கூடுதலாக 72 டி.எம்.சி. கோரும் தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்ககூடாது என கர்நாடகா வலியுறுத்தி உள்ளது.