
சிலை திறப்பு விழாவில் பேனர் வைக்கும் முயன்றபோது நான்கு பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் கோதாவரியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர மாநிலம் கோதாவரியில் பாப்பண்ணா கவுடு சிலை திறப்பு விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலை திறப்பு விழாவிற்காக வரும் முக்கிய நபர்களை வரவேற்பதற்காக பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர் பொருத்தும் பணிகள் நடைபெற்றது. 16 அடி உயரம் கொண்ட பிளக்ஸ் பேனர் பல்வேறு இடங்களில் பொருத்தும் பணிகள் நேற்று நள்ளிரவு முதல் நடைபெற்ற வந்தது.
இந்நிலையில் பிளக்ஸ் பேனர் அமைத்துக் கொண்டிருந்த பொழுது பேனரின் இரும்பு கம்பி மின்சார வயரில் உரசியதில் நான்கு இளைஞர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. நான்கு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி துடிதுடித்துக் கீழே விழுந்தனர். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் மின்சார இணைப்பை துண்டித்ததோடு, நான்கு இளைஞர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சம்பவ இடத்திலேயே நான்கு பேரும் உயிரிழந்தது மருத்துவ சோதனையில் தெரியவந்தது. உடனடியாக தகவலறிந்து அங்கு வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.