தவறான கரோனா சோதனை முடிவுகளால், ஆரோக்கியமாக இருக்கும் 35 பேருக்கு கரோனா இருப்பதாக நினைத்து அவர்களை நோயாளிகளுடன் தங்கவைத்து சிகிச்சையளித்த சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகளுடன் காணப்பட்ட 35 பேர் தனியார் மருத்துவமனைகள் மற்றும் சோதனைக்கூடங்களில் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த பரிசோதனைகளில், கரோனா இல்லாத 35 பேருக்கு கரோனா இருப்பதாகத் தவறான சோதனை முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கரோனா இல்லாத அந்த 35 பேரும் கரோனா சிகிச்சை அளிக்கப்படும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்குக் கடந்த மூன்று நாட்களாக மற்ற கரோனா நோயாளிகளுக்கு மத்தியில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது. பின்னர் அவர்களது சோதனை மாதிரிகள் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டபோது, 35 பேருக்கும் கரோனா இல்லை என முடிவுகள் வந்துள்ளன.
இதனையடுத்து நடந்த விசாரணையில் தனியார் ஆய்வகங்களில் தவறான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தனியார் ஆய்வகங்களில், சோதனை மாதிரிகள் உகந்த வெப்பநிலையில் பராமரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது, மேலும், இதன் காரணமாகவே தவறான முடிவுகள் வந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. "கரோனா சோதனைகளில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்த ஆறு ஆய்வகங்களின் தகவல்கள் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளன. இதில் ஒரு ஆய்வகம் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, மற்றவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்" என்று நொய்டா தலைமை மருத்துவ அதிகாரி கூறியுள்ளார்.