கேரள கடல் பகுதியில் கப்பலில் கடத்தி வரப்பட்ட 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 'மெத்தபெட்டமைன்' எனும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேசிய போதைப்பொருள் தடுப்பு மையம் கடற்படையுடன் இணைந்து குழு அமைத்து அந்த வழியாக வந்த கப்பல்களை கண்காணித்தபோது இந்த போதைப் பொருள் பிடிபட்டுள்ளது. 'சமுத்திரகுப்த்' என்ற பெயரில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின்போது பெரிய கப்பலில் போதைப் பொருள்கள் கடத்தல் நடைபெறுவதாக தகவல் கிடைக்கப்பெற்றது. மாலத்தீவில் இருந்து புறப்பட்ட ஒரு குறிப்பிட்ட கப்பல் இறுதியில் கொச்சி துறைமுகத்தை நெருங்கியது. தொடர்ந்து நவீன தொழில்நுட்பம் மூலம் கப்பலின் பாதை கண்டறியப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது அக்கப்பலில் போதைப்பொருள்கள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஒரு நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் பாகிஸ்தானை சேர்ந்த நபர் என்பது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த போதைப் பொருளானது பாகிஸ்தானின் ஜவானி என்ற பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கப்பலில் இருந்த 134 சாக்குகளில் 28 ஆயிரம் கிலோ 'மெத்தபெட்டமைன்' பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 25 ஆயிரம் கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது. சந்தேகத்திற்குரிய பாகிஸ்தானை சேர்ந்த அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணையானது நடைபெற்று வருகிறது. 25 ஆயிரம் கோடி மதிப்புடைய போதைப் பொருள் கேரளாவில் கைப்பற்றப்பட்டது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.