
பா.ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செப்டம்பர் 3ஆம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்றார். விமானத்தில் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தூத்துக்குடியை சேர்ந்த சோபியா (வயது 28) என்ற பெண் பயணி திடீரென பா.ஜனதா கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பினார். விமானம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தை மதியம் 12.01 மணிக்கு வந்தடைந்தது. அங்கு வரவேற்பு அறையில் தமிழிசை சவுந்தரராஜன், அந்த இளம்பெண்ணிடம் கோஷம் எழுப்பியது தொடர்பாக தட்டிக்கேட்டார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன், தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியனிடம் புகார் அளித்தார். அதன்பேரில் புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சோபியாவை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை, சோபியா மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் (ஐ.பி.சி.290), பொது இடத்தில் அரசு, அரசு சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு எதிராக மக்களை கிளர்ந்து எழச்செய்யும் வகையில் பேசுதல் (ஐ.பி.சி.505(1)(பி), போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (75(1)(சி) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
பின்னர் அவரை தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வி வீட்டுக்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். சோபியாவை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவரை கொக்கிரகுளம் பெண்கள் சிறைக்கு அழைத்து சென்றனர். தனக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு இருப்பதாக சோபியா தெரிவித்ததால் அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று சோபியாவுக்கு ஜாமீனும் வழங்கப்பட்டுவிட்டது. சோபியாவின் கைதுக்கு பல தரப்பிலான அரசியல்வாதிகள் தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, ”நாட்டில் ஒரேயொரு குரல்தான் ஒலிக்க வேண்டும், அது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ன் குரலாகத்தான் இருக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. அவர்களைத் தவிர்த்து யாராவது பேசினால் அவர்கள் சிறையில் தள்ளப்படுகிறார்கள். இதற்காகத்தான் ஆயிரக்கணக்கானோர் தங்களின் வாழ்க்கையைத் தியாகம் செய்தார்களா? இதைத்தான் இந்தியா விரும்புகிறதா? 2019க்கான போராட்டம் என்பது பாஜகவின் பாசிசம் மற்றும் முற்போக்காளர்கள் முன்னெடுக்கும் ஜனநாயகத்துக்கும் இடையில் இருக்கும்” என்று கூறினார்.