இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது தினசரி 4 லட்சம் பேருக்கு கரோனா உறுதியான நிலையில், தற்போது நாட்டின் தினசரி கரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்தநிலையில் நேற்று (02.12.2021) செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், நாட்டின் 18 மாவட்டங்களில் வாராந்திர கரோனா உறுதியாகும் சதவீதம் 5 முதல் 10 ஆக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, மாவட்டங்களில் அதிக கரோனா பாதிப்பு சதவீதம் பதிவாவது இன்னும் கவலைக்குரியதுதான் என தெரிவித்த லாவ் அகர்வால், கவலையளிக்கும் 18 மாவட்டங்களில், ஒன்பது மாவட்டங்கள் கேரளாவில் உள்ளதாகவும், அருணாச்சல பிரதேசம், அசாம், இமாச்சல பிரதேசம், லடாக், மணிப்பூர், புதுச்சேரி, சிக்கிம், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மாவட்டம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், கேரளா மற்றும் மஹாராஷ்ட்ராவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளதாகவும், நாட்டில் பதிவாகும் கரோனா பாதிப்புகளில் 55 சதவீதம் இந்த இரு மாநிலங்களில் இருந்துதான் பதிவாகிறது எனவும் லாவ் அகர்வால் கூறியது குறிப்பிடத்தக்கது.