புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10ம் தேதி துணை ஆளுநர் தமிழிசை உரையுடன் தொடங்கியது. அதேசமயம் மத்திய அரசு பட்ஜெட்டிற்கு அனுமதி அளிக்காததால் அன்றைய தினமே பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு மத்திய அரசு பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 22-ஆம் தேதி மீண்டும் தொடங்கியது. 2022 - 2023-ஆம் நிதி ஆண்டுக்கான ரூபாய் 10,696.61 கோடிக்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்து, துறை வாரியாக நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்து உரையாற்றினார்.
கடைசி நாளான இன்று பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
விவாதத்தின் முடிவில் முதல்வர் ரங்கசாமி பதிலளித்தார்.
அப்போது அவர், "புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. இடம் தேர்வு இன்னும் இறுதியாகவில்லை. விரைவில் புதிய சட்டமன்றம் கட்டும் பணி தொடங்கும். 2022-ஆம் ஆண்டு விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் 13.8 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியார் பங்களிப்புடன் அரசு விரைவில் துவங்கும். நலிவடைந்த கூட்டுறவு நிறுவனங்களை மேம்படுத்த 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் பாண்டெக்ஸ், பாண்பேப் நிறுவனங்கள் மூலம் மீண்டும் அரசின் இலவச துணி வகைகள் வழங்கப்படும். விழாக்காலம் துணி மற்றும் மாணவர்களுக்கான சீருடைகள் அரசு நிறுவனம் மூலம் வழங்கப்படும்.மூடப்பட்டுள்ள அரசின் 3 மில்களை இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு செயல்படுத்தப்படும். அரசு கலந்தாய்வில் தேர்வாகும் முதுகலை பட்டப்படிப்பிற்கும் அரசு நிதி வழங்கும்.
கடற்கரை சாலையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரெஞ்சு பாரம்பரியமிக்க நகராட்சி கட்டிடம் விரைவில் திறக்கப்படும், 70 முதல் 80 வயதுள்ள முதியோருக்கு உதவித்தொகை 2500 ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். துப்புரவுப்பணியாளர்கள் இனிமேல் தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள்" என்றார்.