நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கர்நாடக சட்டசபையில் இன்று காலை எம்.எல்.ஏ.க்களுக்கான பதவிப்பிரமாணம் தொடங்கியது. எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றதை அடுத்து காங்கிரஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவிருந்தது.
இந்நிலையில், இன்று காலை முதல் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் பதவி பிரமாணம் முடிவடைந்த நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா மாலை 3.30 மணி முதல் பேசத் தொடங்கினார். அவர் தனது உரையில், அம்பேத்கரின் 150ஆவது பிறந்த தினத்தில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் என்னை முதல்வர் வேட்பாளராக நியமித்தனர். விவசாயக் கடன்களை ரத்து செய்ததைப் போல ஏழை, எளிய மக்களுக்காக நான் உழைத்துக் கொண்டிருப்பேன். காங்கிரஸ் கட்சியினர் தங்களது எம்.எல்.ஏ.க்களையே நம்பவில்லை. அவர்களது குடும்பத்தினருடன் பேசவிடாமல், அவர்களை அடைத்து வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். எத்தனை தொகுதிகளில் வெற்றிபெறுகிறோம் என்பது முக்கியமில்லை. மக்கள் மத்தியில் எவ்வளவு ஆதரவைப் பெற்றிருக்கிறோம் என்பது மட்டுமே முக்கியம் எனவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டு, அவையை விட்டு வெளியேறினார். பா.ஜ.க. 104 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றிருந்த நிலையில், ஆட்சியமைக்க ஆளுநர் எடியூரப்பாவை அழைத்திருந்தார். தற்போது தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்க அவர் ராஜ்பவனுக்கு சென்றுள்ளார்.