உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி. மருத்துவமனையில் மூளைவீக்க நோயாளிகளுக்கான பிரிவில், ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் பச்சிளம் குழந்தைகள் கொத்துக்கொத்தாக உயிரிழந்தன. இந்த சமயத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்த மருத்துவர் கஃபீல்கான், மீடியாக்களில் பரவலாக பேசப்பட்டார்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்த காவல்துறை, அதில் மருத்துவர் கஃபீல்கானையும் இணைத்து சிறையில் அடைத்தது. அன்றிலிருந்து இன்றுவரை பிணையில் வெளிவரமுடியாமல், மன அழுத்தத்துடன் முறையான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்காமல் கஃபீல்கான் சிறையில் அவதிப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி மருத்துவர் கஃபீல்கான் சிறையில் இருந்தபடி எழுதிய கடிதத்தை அவரது மனைவி நேற்றுமுன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் வாசித்துக்காட்டினார். அதில் நீண்டகாலமாக நிலவிய நிர்வாகக் கோளாறுகளை மறைப்பதற்காக தன்னை பலிகடா ஆக்கி விட்டார்கள் என மருத்துவர் கஃபீல்கான் எழுதியுள்ளார்.
மேலும் அந்தக் கடிதத்தில், ‘சம்பவம் நடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி நான் விடுமுறை பெற்றிருந்தேன். அன்றைய இரவு வாட்ஸ்அப் மூலம்தான் எனக்கு மருத்துவமனையில் மோசமான சூழல் நிலவுவது பற்றிய தகவல் கிடைத்தது. ஒரு மருத்துவராகவும், தந்தையாகவும், பொறுப்புமிக்க இந்தியக் குடிமகனாகவும் என்ன செய்யவேண்டுமோ அதையே அன்று செய்தேன். ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் செத்துக்கொண்டிருந்த ஒவ்வொரு குழந்தையையும் காப்பாற்ற முடிந்தவரை போராடினேன். புஷ்பா சேல்ஸ் நிறுவனத்தில் இருந்து நிலுவைத்தொகையை திரும்பச் செலுத்துமாறு 14 முறை நினைவூட்டப்பட்டபோதும், அதைக் கண்டுகொள்ளாமல் இருந்த மாவட்ட கலெக்டர், மருத்துவக்கல்விக்கான பொது இயக்குனர், மருத்துவக் கல்விக்கான பொது தலைவர் போன்றோர்தான் குற்றவாளிகள். இன்று அவர்களது நிர்வாகக் கோளாறுகளை மறைக்க எங்களை பலிகடா ஆக்கி சிறையில் தள்ளிவிட்டார்கள்’ என தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் யோகி ஆதித்யநாத் தான் மீடியாக்களில் புகழப்பட்டது குறித்து ஆத்திரம் கொண்டதாகவும், தன்னிடம் மிரட்டும் தொணியில் அவர் பேசியதாகவும் தெரிவித்துள்ள கஃபீல்கான், தன்னை காவல்துறையில் சரணடையச் செய்ய தனது குடும்பத்தினர் மிரட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கடிதத்தை வெளியிட்ட கஃபீல்கானின் மனைவி சபிஸ்தா, ‘என் கணவர் எந்த குற்றமும் செய்யாதவர். அவர் அப்படிச் செய்திருந்தால் அந்த மோசமான சூழலில் மருத்துவமனைக்குச் செல்லாமல், வீட்டிலேயே இருந்திருக்கலாம். பல சமயங்களில் மருத்துவமனைக்குத் தேவையான உபகரணங்களை தனது சொந்தப் பணத்தில் வாங்கித் தந்திருக்கிறார். அந்தக் கோர சம்பவத்திற்கு நிர்வாகக் கோளாறுகளே காரணம்’ எனக்கூறி தனது கணவருக்கு நீதி கிடைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.