தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும், காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியும் சமூக ஊடகம் மூலமாக இணைந்த 50 மாணவர்கள் பயணியர் விடுதி முன்பு போராட்டத்தில் இன்று மாலை ஈடுபடப்போவதாக வந்த தகவலை தொடர்ந்து பயணியர் விடுதி முன்பு டி.எஸ்.பி.ஜெபராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வந்த மாணவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை போராட்டம் நடத்த முன் அனுமதி பெற வேண்டும் என்று கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் பிரச்சினைகள் ஏற்படமால் இருக்க அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்க, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி இணைச்செயலாளர் முத்துவேல்ராஜா என்பவர் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும், காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியும், பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு கிருஷ்ணன் கோவில் அருகே மோடி உருவப்படத்தினை தீயினால் கொழுத்தி, செருப்பால் அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியிலும், கோவில்பட்டி நகரின் முக்கிய பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.