விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ (15). 10 ஆம் வகுப்பு படித்து வந்த இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே தீப்புகை வந்ததும், அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டிற்கு ஓடி வந்துள்ளனர். பூட்டியிருந்த வீட்டை உடைத்து பார்த்தபோது, உடலில் நெருப்புடன் ஜெயஸ்ரீ எரிந்து கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரை மீட்ட உறவினர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கைதான முருகன், கலியபெருமாள் ஆகியோருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டதால் விழுப்புரம் மாவட்டம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் மாணவி ஜெயஸ்ரீ குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (14.05.2020) ஜெயஸ்ரீ குடும்பத்தை நேரில் சந்தித்து ஒரு லட்சம் ரூபாய் நிவாரண தொகையை வழங்கி, ஆறுதல் கூறினார்.