Skip to main content

''நாங்க எங்க போறது?'' - புலம்பிய நிர்வாகிகளுக்கு உறுதியளித்த எ.வ.வேலு!

Published on 04/02/2021 | Edited on 04/02/2021

 

dddd


திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 தொகுதிகள் உள்ளன. இதில், திமுக தெற்கு மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், செங்கம் என நான்கு தொகுதிகள் உள்ளன. 


கலசப்பாக்கம் தொகுதி அதிமுகவின் பலமான தொகுதி என்கிற பெயரோடு இருந்தது. இதனால், சில தேர்தல்களாக அந்த தொகுதியில் திமுக போட்டியிடாமல் பாமக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எனத் தள்ளிவிட்டுக்கொண்டு இருந்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் அந்த தொகுதியில் திமுக போட்டியிட்டே ஆகவேண்டும் என முடிவுசெய்த மா.செ.வேலு, இதற்காக தொகுதியின் பொறுப்பாளராக, தனது மகன் டாக்டர் கம்பனை சில ஆண்டுகளுக்கு முன்பு களமிறங்கினார்.
 

அவர் தீவிரமாகக் களப்பணியாற்றினார். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக வேட்பாளர் அண்ணாதுரைக்கு அதிகமான வாக்குகள் அங்கு கிடைத்தது. அதற்கடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில் கலசப்பாக்கம், புதுப்பாளையம் ஒன்றியங்களில் ராஜதந்திரமாகக் களமிறங்கி திமுகவினர் சேர்மனாக்கப்பட்டார்கள். இதில் மகிழ்ந்த திமுக நிர்வாகிகள் கம்பனை அங்கு வேட்பாளராக்க வேண்டும் என முடிவு செய்தனர்.
 

இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக அந்த தொகுதியில் சீட்டை எதிர்பார்த்த திமுக பிரபலங்கள் மறைமுகமாகப் புலம்பத் துவங்கினார்கள். சமூக ரீதியான பிரச்சனையும் எழுந்தது.


திருவண்ணாமலை எம்.எல்.ஏ வேலு, நாயுடு சமுதாயம். கீழ்பென்னாத்தூர் எம்.எல்.ஏ பிச்சாண்டி நாயுடு சமுதாயம். கலசப்பாக்கம் தொகுதியில் கம்பன் நிறுத்தப்பட்டால் அவரும் நாயுடு சமுதாயம். இது எப்படிச் சரியான ஒதுக்கீடாக இருக்கும். மற்ற சாதிகள் இங்கு இல்லையா என்கிற கேள்வியை மாவட்டத்தில் பலமாகவுள்ள வன்னியர், முதலியார் ஆகிய சாதி கட்சிப் பிரமுகர்கள் எழுப்பினர். மற்றொருபுறம் இருக்கும் நாலு தொகுதியில் அப்பா, மகன் ஆளுக்கொரு தொகுதி எடுத்துக்கொண்டால் நாங்கள் எங்கு போய்ப் போட்டியிடுவது என்கிற கேள்வியை எழுப்பினர்.
 

cnc

 

இந்தத் தகவல்கள் எல்லாம் வேலு கவனத்துக்கும் சென்றன. இதனால் கட்சிக் கூட்டங்களில், என் மகன் அந்த தொகுதியின் வேட்பாளர் இல்லை எனப் பேசினார் வேலு. இந்நிலையில், மாவட்டத்தில் மீண்டும் சலசலப்புகள் எழுந்ததன் விளைவாக, கலசப்பாக்கம் தொகுதி கட்சிப் பிரமுகர்களை ஒன்றியம் வாரியாக அலுவலகத்துக்கு அழைத்து, என் மகன் வேட்பாளரில்லை, நீங்களே சரியான வேட்பாளரை முன்னிறுத்துங்கள். நம் கட்சி அங்கு இந்த முறை போட்டியிடுவது உறுதி. உங்களுக்குள் கோஷ்டிப் பூசலை அதிகப்படுத்திக்கொண்டு கழகம் நிறுத்தும் வேட்பாளரை தோற்கடித்துவிடாதீர்கள். அனைவரும் ஒற்றுமையாக நின்று ஒருவரை வேட்பாளராக முன்னிறுத்துங்கள். அவர் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார்.
 

இதனால் முதலியார் சாதியைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சீட் பெற்றுவிட வேண்டுமென பல பிரமுகர்களும் அங்கு முட்டி மோதிக்கொண்டுள்ளனர். அதேநேரத்தில் அந்தத் தொகுதியை எங்களுக்கு ஒதுக்குங்கள் எனக் காங்கிரஸ் கட்சி கேட்டுவருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்