விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் (20) அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் ராஜ்குமாரும் (23), கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 8 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய ராஜ்குமார், அப்பெண்ணை அடிக்கடி வெளியூர்களுக்கு அழைத்துச் சென்று தனிமையில் இருந்துள்ளார். பின்னர், அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜ்குமாரிடம் வலியுறுத்தியபோது அவர் திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். 'தனக்கு வேலை இல்லை, குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லை' என்று தட்டிக் கழித்து வந்துள்ளார். இந்த நிலையில், அவர் காதலித்த அந்த இளம்பெண் மூன்று முறை கருவுற்றிருந்த போதும் ராஜ்குமார் அந்தப் பெண்ணுக்கு மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து கருவைக் கலைத்துள்ளார்.
தன்னை திருமணம் செய்துகொள்ளாமல் தன்னுடன் தனிமையில் இருப்பதற்கு மட்டுமே ராஜ்குமார் விரும்புகிறார். இதன் மூலம், தன்னை ஏமாற்றப் பார்க்கிறார் என்பதை அறிந்துகொண்ட அந்த இளம்பெண், கடந்த 2015ஆம் ஆண்டு மீண்டும் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ராஜ்குமாரிடம் மன்றாடிக் கேட்டுள்ளார். அவர் அப்போதும் மறுக்கவே, இனியும் பொறுப்பதில் பயனில்லை என்று தனது பெற்றோரிடம் விவரத்தைக் கூறி அவர்கள் உதவியுடன் ராஜ்குமார் வீட்டிற்கு நியாயம் கேட்கச் சென்றுள்ளார். இளம்பெண்ணின் தந்தை ஜெயபால், தாய் யசோதா, அவரது சகோதரர் சதீஷ் குமார் ஆகியோரை, ராஜ்குமார் குடும்பத்தினர் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் மீது அந்த இளம்பெண் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில், விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்தனர் மகளிர் போலீசார். அது, சம்பந்தமான வழக்கு விழுப்புரம் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
இவ்வழக்கை, விசாரித்த நீதிபதி சாந்தி, இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தார். அந்தத் தீர்ப்பில், அந்த இளம்பெண்ணை ஏமாற்றிய ராஜ்குமாருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்ற மூவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில், அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ராதிகா செந்தில்குமார் ஆஜராகி காதலித்த பெண்ணை ஏமாற்றிய ராஜ்குமாருக்கு தண்டனை கிடைக்க வாதாடியுள்ளார். காதலித்த பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்த செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.