தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. அப்போது தமிழக அரசு சார்பில், “நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக ஆளுநரை சந்தித்துப் பேச முதலமைச்சர் தயார். குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்துப் பேச முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தயார். ஆளுநர் தாமாக முன் வந்து முதலமைச்சரை சந்தித்துப் பேசி இருக்க வேண்டும். முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையே சுமூக உறவு இருந்தால்தான் பிரச்சனைகளை தீர்க்க முடியும். முட்டுக்கட்டையை தீர்க்க எதையாவது செய்ய முடியுமா எனப் பார்க்கிறோம். ஜனாதிபதிக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது. எனவே இந்த விவகாரத்தை அட்டார்னி ஜெனரல் கவனிக்கும்படி அறிவுறுத்துகிறேன். உச்சநீதிமன்றம் கூறியுள்ளதால் முதலமைச்சரை சந்திப்பதாக ஆளுநர் கூறியது ஏன்” என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் கேள்வி எழுப்பியுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கை ஜனவரி மாதம் 3 ஆம் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.
முன்னதாக இந்த பிரச்சனை தொடர்பாகத் தமிழக முதல்வரும் தமிழக ஆளுநரும் அமர்ந்து பேசலாமே என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்திய நிலையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாகப் பேச தமிழக முதல்வருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு தற்பொழுது புயல் நிவாரணப் பணிகள் மற்றும் மத்தியக் குழு ஆய்வு உள்ளிட்ட பணிகள் இருப்பதால் இந்த பணிகள் எல்லாம் முடிந்த பிறகு வருவதாகத் தமிழக முதல்வர் தரப்பில் பதில் தகவல் ஆளுநருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.