இந்திய ஆட்சிப் பணித் தேர்வான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 2019 ஆம் ஆண்டு எழுதிய தேர்வில் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மதுரை சிம்மக்கல் அருகேயுள்ள மணிநகரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன்- ஆவுடைதேவி என்ற தம்பதியினரின் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மகளான பூரணசுந்தரி என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.
பூர்ண சுந்தரி 3 வயதில் பார்வை நரம்பு சுருங்கியதால் தனது பார்வையை முழுமையாக இழந்தார். இருந்தபோதிலும் தன்னம்பிக்கையோடு தனது கல்வியைத் தொடர வேண்டும் என்று எண்ணி ஒன்றாம் வகுப்பிலிருந்தே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுவந்துள்ளார். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண்னும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1092 மதிப்பெண் பெற்ற நிலையில் பி. ஏ (ஆங்கிலம்) பயின்று வந்துள்ளார்.
அப்போது தனது தந்தை பொருளாதார நெருக்கடியில் இருந்ததைச் சிந்தித்து தான் ஐ.ஏ.எஸ் ஆகி மக்களுக்குச் சேவையாற்றி பெற்றோர்களுக்கும் உதவ வேண்டும் என அதில் கவனம் செலுத்தி படித்துவந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வு, வங்கிப் போட்டி தேர்வு, குடியுரிமை பணி தேர்வு என 20 க்கும் மேற்பட்ட போட்டி தேர்வுகளை மனம் தளராமல் எழுதியுள்ளார். போட்டி தேர்வுகளில் தோல்வி அடைந்தாலும் கூட நிச்சயம் ஒருநாள் தேர்வில் வென்றுவிட வேண்டும் என்ற முனைப்போடு தேர்வுகளை எழுதிவந்தார்.
2018 ஆம் ஆண்டு வங்கி தேர்வில் வெற்றி பெற்று அரசு ஊரக வளர்ச்சி வங்கியில் கிளர்க்காக பணிபுரிந்து வரும் நிலையில் 4ஆவது முறையாகக் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற குடியுரிமை பணிக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று அதில் 296 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது பூர்ண சுந்தரிக்கு கூடுதல் உத்வேகத்தை அளித்துள்ளது.
தேர்வு வெற்றி குறித்து பேசிய பூர்ணசுந்தரி, தாம் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக இருந்துகொண்டு இந்த வெற்றி இலக்கை அடைய எண்ணற்ற சவால்களைச் சந்தித்துள்ளேன். தேர்வுக்காக பிறரைப் படித்துக் காண்பிக்கச் சொல்லி அதனைக் கேட்டு மனனம் செய்து கற்றுக்கொண்டேன். போட்டி தேர்விற்காக தான் சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கி பயின்ற போது அங்குள்ள நண்பர்கள் கொடுத்த உற்சாகமும், பொருளாதார உதவியும்தான் என்னை வெற்றியாளராக உருவாக்கியுள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
4 முறை இந்தத் தேர்வை எழுதி தற்போதுதான் வெற்றி கிடைத்துள்ளது, குடியுரிமை ஆட்சிப் பணியில் இருந்து அரசின் திட்டங்களை மக்களுக்குச் சென்றடைய செய்ய வேண்டும், அதன் மூலம் மன திருப்தி அடைய வேண்டும் எனத் தெரிவித்தார்.