Skip to main content

உயிர் பிரியும் தருணத்தில் ஆசிரியர்களால் காப்பாற்றப்பட்ட மாணவனுக்கு தரையில் கிடத்தி சிகிச்சை

Published on 20/07/2018 | Edited on 20/07/2018
Student

  
 புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் மின்னாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அருண்பாண்டியன் மாலையில் வீட்டுக்குச் செல்லும் போது பேருந்து நிலையம் அருகில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சக மாணவர்களால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சையும், தொடர்ந்து 108 ஆம்புலன்சில் சிகிச்சையுடன் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் சேர்க்கும்போது 10 சதவீதம் உயிர் துடிப்பு மட்டுமே உள்ளதாக மருத்துவர்கள் சொன்னதால் சக மாணவர்கள் கதறினார்கள். 

பிராணவாயு இயக்கத்தில் உடல் செயலற்று கிடந்த மாணவனை பார்த்து பெற்றோர்களும் கதறினர். உயிரை காக்க கொஞ்ச நிலத்தையும் விற்க தயாராகிவிட்ட நிலையில் அங்கு சென்ற ஆசிரியர்களான மணிகண்டனும், சோமசுந்தரமும் மாணவனின் நிலை அறிந்து அவன் காதில் மெதுவாக அழைக்க கொஞ்சம் கொஞ்சமாக உயர் பெற்றான். அருகில் நின்ற மருத்துவர்களும் ஆச்சரியப்பட்டனர். 
 

7 நிமிடத்தில் சுயநினைவுக்கு திரும்பிய மாணவன் 2 மணி நேரத்தில் எழுந்து நடந்து சென்றான். அதன் பிறகு உயிர் எழுப்பிய ஆசிரியர்கள் கிளம்பினார்கள். 108 ஆம்புலன்சில் தொடர்ந்து சிகிச்சை அளித்த நர்சும், வேகமாக ஆம்புலன்சை ஓட்டி வந்த ஓட்டுநருக்கும் அப்போது தான் நிம்மதி கிடைத்தது. அதுவரை காத்திருந்தவர்கள் மாணவன் கண்விழித் பிறகே சென்றனர். இந்த தகவலை உருக்கமாக நக்கீரன் இணையதளத்தில் முதன் முதலில் வெளியிடப்பட்டது. அதைப் பார்த்தவர்கள் ஆசிரியர்களை பாராட்டியதுடன் மாணவன் நலமுடன் வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்றனர்.
 

    அந்த மாணவனுக்கு உரிய சிகிச்சை அளித்து அனுப்புவதாக மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் வியாழக்கிழமை அந்த மாணவன் பொது வார்டில் தரையில் கிடத்தப்பட்டிருந்தான். படுக்கை வசதி அந்த வார்டில் இருந்தும் துண்டை விரித்து தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    நக்கீரன் செய்தியை பார்த்து மற்ற ஊடகங்களும், பத்திரிகையாளர்களும் மாணவனை சந்திக்க சென்றனர். வெள்ளிக்கிழமை சில பத்திரிகையாளர்கள் சென்றபோது மாணவன் தரையில் கிடப்பதை பார்த்து மருத்தவமனை நிர்வாகத்திடம் பேசியுள்ளனர். அதன் பிறகு உடனடியாக அந்த மாணவனுக்கு படுக்கை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மாணவனுக்கு உரிய சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இதைப் பார்த்த சிலர், உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு வேண்டியவர்கள் என்ற சொன்னால் அவர்களுக்கு உயர்ந்த சிகிச்சையும் இது போன்ற வறுமையில் வாடும் ஏழைகளுக்கு தரையில் சிகிச்சையும் வழக்கமாகிவிட்டது. ஆனால் இது ஏழைகள் பயன்படும் மருத்தவமனை என்று மாண்புமிகுக்கள் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். அவர்களின் தம்பட்டம் அடிப்பது போலவா நடக்கிறது?

கடந்த வாரம் காவல் துறையில் கண்ணீர் புகையால் மயக்கமடைந்த ஒரு பெண் போலிசாரை வெளியே தெரியக் கூடாது என்று தனி அறையில் வைத்து சிகிச்சை கொடுத்தார்கள். அப்படியும் பத்திரிகையாளர்கள் தேடுவது அறிந்து டீன் பார்வையில் உள்ள ஒரு அறைக்கு மாற்றி சிகிச்சை கொடுத்தார்கள். ஆனால் இந்த ஏழை சிறுவனுக்கு அதுவும் ஆசிரியர்களால் உயிர் மீண்ட மாணவனுக்கு அரசு மருத்துவமனை  கொடுத்த சிகிச்சையை பாருங்கள் என்றனர்.  

 

 

 

 


            

சார்ந்த செய்திகள்