திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் ஸ்டாலின் (திமுக), கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்), வைகோ(மதிமுக), திருமாவளவன்(விசிக), கே.பாலகிருஷ்ணன்(சிபிஎம்), வீரபாண்டியன்(சிபிஐ), கே.எம்.காதர்மொய்தீன்(இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), எம்.எச்.ஹவாஹிருல்லா(மனித நேய மக்கள் கட்சி), தேவராஜன்(கொமதேக), பச்சமுத்து(ஐஜேகே) ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள தீர்மானம்:
பொள்ளாச்சி பாலியல் வன்கொடூர வழக்கில் குற்றவாளிகளைத் தப்பவிடாமல் உயர் நீதிமன்றக் கண்காணிப்பின்கீழ் சி.பி.ஐ. விசாரணை நடத்தி நீதி வழங்குக!
’’தமிழ்நாட்டை ஒட்டு மொத்தமாக உலுக்கியுள்ள பொள்ளாச்சி இளம்பெண்கள் மீதான பாலியல் வன்கொடூரத்தில் உரிய நீதியும் நியாயமும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அதற்காக அறவழிப் போராட்டங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுங்கட்சியின் துணையுடன் நடைபெற்றுள்ள இந்தக் கொடிய குற்றத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றால்தான் முழுமையான நீதி கிடைக்கும்.
தங்கள் மீதான பாலியல் தாக்குதலை வெளிப்படுத்த இளம்பெண்கள் தயங்கிய சூழலில், அவர்களுக்குத் தைரியமும் தன்னம்பிக்கையும் அளிக்க வேண்டிய அரசும் காவல்துறையும் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, புகார் கொடுத்த பெண்ணின் பெயரையும் பிற விவரங்களையும் வெளியிட்டு சி.பி.ஐ விசாரணைக்கான அரசாணையை வெளியிட்டிருப்பது, பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் புகார் கொடுக்க விடாமல் தடுக்கும் உத்தியாகவே உள்ளது. நியாயம் கேட்டுப் போராடும் மாணவ - மாணவியர் மீது போலீஸ் மேற்கொள்ளும் பலப்பிரயோகமும் அச்சுறுத்தலேயாகும். நீதி கேட்கும் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் காவல்துறையினர், நடந்த உண்மைகளை ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியிடுவோர்மீதும் தாக்குதலை மேற்கொள்கிறார்கள். இந்தக் கொடூரம் குறித்த காணொலியை வெளியிட்ட ‘நக்கீரன்’ இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களுக்கு காவல்துறையிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டிருப்பது கருத்துரிமையை நசுக்குகின்ற கண்டனத்திற்குரிய நடவடிக்கையாகும்.
பாலியல் வன்கொடூரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளின் பின்புலமாக ஆளுங்கட்சியை சேர்ந்த அதிகாரத்தில் உள்ளவர்கள் இருப்பதால் உண்மையை மறைப்பதற்கான முயற்சிகளே அதிகளவில் நடைபெறுகின்றன. அவசரம் அவசரமாக குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வது, சி.பி.சி.ஐ.டி விசாரணை என அறிவித்து பின்பு, சி.பி.ஐ. விசாரணைக்கு அரசாணை வெளியிடுவது, அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்துமே குற்றவாளிகளைத் தப்ப வைக்கவும், இதன் பின்னணியில் உள்ள ஆளுந்தரப்பினரைக் காப்பாற்றவுமான செயல் பாடுகளாகவே அமைந்துள்ளன.
தமிழக மக்களின் மனசாட்சியின் குரலாக மாறிவிட்ட பொள்ளாச்சி பாலியல் வன்கொடூர வழக்கில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால், உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பின்கீழ் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும். சிலை கடத்தல் வழக்கு போன்றவற்றில் நீதித்துறை காட்டுகின்ற சிறப்பு கவனத்தை இந்த வழக்கிலும் காட்ட வேண்டும். எந்த வகையிலும் பாலியல் கொடூரக் குற்றவாளிகளும் அவர்களைப் பின்னணியில் இருந்து இயக்கிய அதிகாரக் கரங்களும் தப்பிவிடாதபடி - கடுமையாகத் தண்டிக்கப்படும் வகையில் நீதி கிடைக்கவேண்டும் என இந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.’’