தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை அனைத்துத் தரப்பு மக்களும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2 ஆம் தேதி (02.01.2024) தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 5 ஆம் தேதி (05.01.2024) பரிசுத் தொகுப்புடன் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாய விலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி மற்றும் சேலை பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிடும் வகையில், நேற்று முன்தினம் (07.01.2024) முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து வரும் 13 ஆம் தேதி (13.1.2024) வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். அதே சமயம் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் 14 ஆம் தேதி (14.1.2024) வழங்கிடவும், பொங்கல் திருநாளுக்கு முன்னதாக தகுதியான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதே சமயம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க வேண்டும் என பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் அரசு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக அரிசி அட்டை வைத்திருந்தவர்களில் பலருக்கு பொங்கல் பரிசுத் தொகை மறுக்கப்பட்ட நிலையில் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.