Skip to main content

முதல்வரின் அலட்சியத்தினால் மக்கள் ஆத்திரம்; சுவர் ஏறி குதித்து ஓடிப்போய் இருக்கிறார் அமைச்சர்! - ஸ்டாலின் பேட்டி

Published on 18/11/2018 | Edited on 18/11/2018
s7

 
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று, நேரில் பார்வையிட்டார். தரங்கம்பாடி பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, நாகை மாவட்ட புயல் பாதித்த பகுதிகளை தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார். அப்போது, ஸ்டாலின் செய்தியாளர்களிடத்தில் பேசிய விவரம் பின்வருமாறு:

 

ஸ்டாலின்: தமிழகத்தில் ஏற்கனவே சுனாமி, தானே, வர்தா, ஒக்கி போன்ற புயல்கள் தாக்கியிருக்கின்றன என்பது வரலாறு. அதை தொடர்ந்து ‘கஜா’ என்கிற பெயரில் தமிழகத்திலே இருக்கக்கூடிய 8 மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படக்கூடிய வகையில் அந்தப் புயல் தாக்கி இருக்கிறது. ஆகவே, இந்த புயல் வரும் என்று மத்திய அரசின் மூலமாக எச்சரிக்கை விடுத்திருந்த காரணத்தால் தமிழகத்தில் இருக்கக்கூடிய பேரிடர் குழு ஓரளவுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்த காரணத்தால் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையிலே நேற்றைய தினம் நானே அதை பாராட்டினேன்.

 

எனவே, திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில் தவறு நடந்தால் தட்டிக் கேட்பது, அதே நேரத்தில் பாராட்டக்கூடிய வகையில் நடைபெற்றால் அதை தட்டிக் கொடுப்பது என்கிற அந்த நிலையில் என்றைக்கும் இருக்கக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.

 

ஆய்வு பணியை இன்று நான் மேற்கொண்ட நேரத்தில், அரசைப் பொறுத்தவரையிலே இன்னும் வேகமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது தான் எல்லோருடைய கருத்து. மழை வரும் காலத்திற்கு முன்பே முறையாக கால்வாய்களை, ஏரிகளை, ஆறுகளை தூர் எடுக்கின்ற சுத்தம் செய்கிற அந்தப் பணியை இந்த அரசு முறையாக நடத்திடவில்லை என்பதை இந்த புயல் பாதிப்பு தெளிவாக காட்டுகிறது.

 

8 மாவட்டங்களைப் பொறுத்தவரையிலே இந்தப் புயலின் காரணத்தால் மின்சாரம் அறவே துண்டிக்கப்பட்டிருக்கிறது. எனவே, உடனடியாக மின்தடை ஏற்பட்டு இருக்கக்கூடிய பகுதிகளில் அதற்குரிய நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். வீடுகள் இடிந்த காரணத்தால் ஏறக்குறைய 50-க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஏறக்குறைய 1 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே இருக்கக்கூடிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் ஒரு சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது.

 

s6

 

எனவே, இந்தப் புயலின் இழப்பினுடைய மதிப்பினை உடனடியாக தயாரித்து அதற்குரிய இழப்பீடை பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மக்களுக்கு வழங்கிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களைப் பொறுத்தவரையிலே போர்க்கால அடிப்படையிலே எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார். அவருடைய சொல் சொல்லாக நின்றுவிடக் கூடாது, செயல் வடிவத்திலே இருக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

 

ஏற்கனவே இறந்து போன குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் நிதி அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். அது போதுமானதாக நிச்சயமாக இருந்திட முடியாது, குறைந்தபட்சம் 25 லட்ச ரூபாய் அவர்களுக்கு வழங்கி அதே நேரத்தில் இறந்து போய் இருக்கக்கூடிய அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசினுடைய வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

 

ஏற்கனவே, நம்முடைய தமிழகத்திலே பல நேரங்களில் புயல் வீசப்பட்டபோது அப்பொழுது பாரத பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்களிடத்திலே இன்றைக்கு இருக்கக்கூடிய ஆட்சி நிவாரண நிதி ஏறக்குறைய ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 573 கோடி ரூபாய் கேட்டிருக்கிறது. அந்த அடிப்படையிலே மத்திய அரசு இதுவரையில் தமிழக அரசுக்கு புயல் நிவாரணத்திற்காக வழங்கிய தொகை 2012 கோடி ரூபாய்தான், மீதி 98 ஆயிரம் கோடி ரூபாய் இன்னும் வழங்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறது.

 

அதுமட்டுமல்ல, ஏற்கனவே டெங்கு, பன்றிக் காய்ச்சல், மர்ம காய்ச்சல் என்று பல நோய்கள் தமிழகத்தை தாக்கிக் கொண்டிருக்கிறது. பலபேர் உயிர் இழந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, இந்தப் புயலின் காரணத்தால் அதிகமாகக் கூடிய சூழ்நிலைதான் உருவாகும். எனவே அதற்குரிய நடவடிக்கையும் நிச்சயமாக இந்த அரசு எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இன்று நான் மழை, புயலினால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய பல பகுதிகளை பார்வையிட்ட நேரத்தில், குறிப்பாக வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியிலே என்னுடைய ஆய்வுப் பணியை நான் நடத்திய நேரத்தில் ஆங்காங்கே கிராமத்தில் இருக்கக்கூடிய மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தார்கள்.

 

s5

 

நான் அவர்களிடத்திலே சென்று, ‘என்ன காரணம்? ஏன் சாலை மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்?’ என்று நான் கேட்ட நேரத்தில் அவர்கள் சொன்னது, இந்த தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் ஓ எஸ் மணியன் அவர்கள் அறிக்கை விடுகிறார். எங்கேயும் பாதிப்பு கிடையாது சகஜ நிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்று தவறான அறிக்கையை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அப்படி சொல்லிவிட்டு மெயின் ரோடு வழியாக சென்று கொண்டிருக்கிறாரே தவிர, எங்களுடைய கிராமப் பகுதிக்கு வந்து இதுவரையில் எந்த இடத்திலும் அவர் பார்வையிடவில்லை. அப்படி அவரை வழிமறித்து நாங்கள் அழைத்த நேரத்தில் ‘இல்லை, இல்லை நான் வர முடியாது’ என்று திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.

 

அதுமட்டுமல்ல, ஒரு வேடிக்கை என்னவென்று கேட்டீர்கள் என்றால், ஒரு அமைச்சர் சாலை மறியலில் ஈடுபட்டு இருக்கக்கூடிய மக்களிடத்திலே சமாதானம் செய்ய முடியாத ஒரு சூழ்நிலையிலே அவர் வந்த காரையே அவர் பயன்படுத்தக்கூடிய அரசாங்கத்தினுடைய கார், அவரை பாதியிலேயே அவரை இறக்கிவிட்டுவிட்டு அவர் சுவர் ஏறி குதித்து ஓடிப்போய் இருப்பதாக அந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்களெல்லாம் என்னிடத்திலே குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்கள்.

 

இந்த நிலையிலே தான் நான் கேட்கிறேன், புயல் வந்து இன்றோடு மூன்றாவது நாள். நியாயமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய இடங்களுக்கு நேரடியாக வந்திருக்க வேண்டும். அவர் இன்னும் வராததே கண்டனத்துக்குரியது. இனிமேலாவது உடனடியாக அவர் புறப்பட்டு வந்து பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய மக்களுக்கு ஆறுதல் சொல்வது மட்டுமல்ல, அவர்களுடைய வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலே கேட்டுக்கொள்கிறேன்.

 

செய்தியாளர்: கஜா புயலினால் வேதாரண்யத்தில் உச்சபட்சமாக பாதிப்பு என்பது அதிகமாக இருக்கிறது. இதுவரையில் பொதுமக்களுக்கு பால் கூட கிடைக்கவில்லை, அதுமட்டுமல்ல மின்சாரம் துண்டிக்கப்பட்டு 22 மணிநேரம் ஆகிறது. எந்தப் பணியையும் மேற்கொள்ள முடியவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். இது பற்றிய உங்கள் கருத்து?

 

ஸ்டாலின்: உங்களிடத்தில் எப்படி குற்றச்சாட்டு வைத்தார்களோ அதே மாதிரி எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் என்னிடத்தில் அந்தக் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்கள். இந்தக் கேள்வியை மீடியா (Media), ஒருவேளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வந்தால் முதலமைச்சர் கூட நாளைக்கு வருவதாக செய்தி இருக்கிறது. ஒருவேளை அவர் வந்தால் அவரிடத்திலே இந்தக் கேள்வியை கேட்டு அதற்குரிய பதிலை அவரிடத்திலே பெற்று அதன் மூலமாக மக்களுக்கு ஏதேனும் நல்ல காரியங்கள் செய்வதற்கான வழிவகையை ஏற்படுத்தி தரவேண்டும் என்று உங்களைப் போன்ற ஊடக தோழர்களிடத்திலே நான் கேட்டுக்கொள்கிறேன்.

 


 

சார்ந்த செய்திகள்