Skip to main content

கட்சியில் பிளவா? கலைஞரிடம் வேண்டிய ஆதங்கம் என்ன? மு.க.அழகிரி பதில்

Published on 13/08/2018 | Edited on 13/08/2018
alagiri


கட்சி ரீதியான எனது ஆதங்கம் குறித்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் சொல்கிறேன் என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

மறைந்த திமுக தலைவர் கலைஞரின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு அருகே கடந்த 8ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. கலைஞரின் இறுதி ஊர்வலத்தின் போது லட்சக்கணக்கான திமுக தொண்டர்களும், பொதுமக்களும் மெரினாவில் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து திமுக தொண்டர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தினமும் மு.க.ஸ்டாலினும் தனது குடும்பத்தினருடன் வந்து அஞ்சலி செலுத்தி செல்கிறார்.

அந்தவகையில், இன்று காலை மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

 

 

என் தந்தையிடம் என் ஆதங்கத்தை வேண்டிகொண்டேன். அது என்ன ஆதங்கம் என்பது இப்போது உங்களுக்கு தெரியாது. தலைவர் கலைஞர் அவர்களின் உன்மையான அனைத்து விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் எல்லாம் என் பக்கம் உள்ளனர் என்னை ஆதரித்துக்கொண்டிருக்கின்றனர்.

இதற்கு காலம் பின்னால் பதில் சொல்லும். என்னுடைய ஆதங்கம் கட்சி தொடர்புடையது தான். திமுக செயற்குழு கூட்டம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் தற்போது திமுகவில் இல்லை என கூறினார்.

இதைதொடர்ந்து, கோபாலபுரம் இல்லம் சென்ற அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள் அவரிடம் தங்களது ஆதங்கம் என்ன என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், கட்சி ரீதியான எனது ஆதங்கம் குறித்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் சொல்கிறேன் என்றார்.

தொடர்ந்து அவரிடம் கட்சியில் பிளவு தொடங்கியிருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நான் கட்சியிலே இல்லை என்று கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்