சூட்டிங்கும் மீட்டிங்கும் ஒன்றாகிவிடாது, ரஜினிக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திரைத்துறை சார்பில் மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு இரங்கல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், அதிமுக விழாவில் எம்.ஜி.ஆர் படத்துடன் கலைஞர் படத்தையும் வைக்க வேண்டும். கலைஞருக்கு மெரினாவில் இடம் தராமல் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன். கவர்னர்லிருந்து மற்ற மாநில முதல்வர்கள், தலைவர்கள் மெரினாவில் இருக்கும் பொழுது தமிழ்நாட்டின் முதல்வர் அங்கு இல்லாதது சரியா? என ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக இன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது,
நினைவேந்தல் நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது என்பது ஆரோக்கியமான முறை அல்ல. கலைஞரின் நினைவேந்தல் கூட்டத்தில் ரஜினிகாந்த் அரசியல் பேசியது தவறு. ரஜினிகாந்திற்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என்று தான் நான் சொல்வேன். சூட்டிங்கும் மீட்டிங்கும் ஒன்றாகிவிடாது, ரஜினிக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை. அவர் ஒரு பகுதி நேர அரசியல்வாதியாக இருந்து முழுநேர அரசியல்வாதியாக மாறுவதற்காக இந்த நிகழ்ச்சியை பயன்படுத்தியுள்ளார்.
திமுக தொண்டர்களை தன்பக்கம் இழுக்க அதிமுகவை விமர்சித்திருக்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ரஜினி பேசியிருக்கிறார். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இருக்கும் போது இப்படி பேசியிருந்தால் ரஜினிகாந்தை பாராட்டலாம், அவர்கள் இல்லாத போது இப்படி பேசியிருப்பது அவரது சந்தர்ப்பவாதத்தை தான் காட்டுகிறது. இதே கருத்தை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இருக்கும் போது கூறியிருந்தால், ரஜினிகாந்த் தமிழத்தில் நடமாடியிருக்க முடியுமா?
அரசியல் பண்பாடு காரணமாகவே துணைமுதல்வர் தலைமையில் கலைஞர் வீட்டிற்கு நேரில் சென்றோம். அதன்பிறகு முதலமைச்சர் தலைமையில் ராஜாஜி அரங்கம் சென்றோம். அதன்பிறகு இறுதி அஞ்சலியில் அரசின் சார்பில் நான் கலந்துகொண்டேன். அரசின் சார்பில் அவர்களுக்கு உரிய மரியாதைகள் செலுத்தப்பட்டன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.