பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்தது. பெட்ரோல், டீசலின் தொடர் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துவந்தனர். மேலும், தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், தற்போது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 11 ரூபாயும் குறைந்துள்ளது.
இதனால், இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 5.26 குறைந்து ரூ.101.40 எனவும், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.11.16 குறைந்து ரூ.91.43 எனவும் விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்ததால் இந்த விலை குறைப்பு நிகழ்ந்துள்ளது. அதேபோல், மத்திய அரசு, பெட்ரோல், டீசல் மீது மாநிலங்கள் விதிக்கும் மதிப்புக்கூட்டு வரியை குறைக்கவும் அறிவுறுத்தியிருக்கிறது.
பாஜக ஆளும், உ.பி., கர்நாடகா, கேவா உள்ளிட்ட மாநிலங்களில் மாநில அரசு தங்கள் கலால் வரியை குறைத்துள்ளன. அதேபோல், புதுச்சேரியிலும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.92க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.19 குறைந்து ரூ.83.58க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசு கடந்த ஆகஸ்ட் மாதமே பெட்ரோல் மீதான மதிப்புக்கூட்டு வரியை ரூ.3 குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பரிசாக இந்த விலை குறைப்பு என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும், மேற்கு வங்கம், ஆந்திரா, அசாம், ஹரியான, இமாச்சல் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் இடைத்தேர்தல் முடிவுகள் இந்த பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு பெரும் காரணம் எனத் தெரிவிக்கின்றனர்.