சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு, பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி நேற்று (30-01-24) நடைபெற்றது. இந்த தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து பா.ஜ.க.வை எதிர்த்து போட்டியிட்டன. அதன்படி, ஆம் ஆத்மியை சேர்ந்த குல்தீப் குமாரும், பா.ஜ.க.வை சேர்ந்த மனோஜ் சோங்கரும் மேயர் பதவிக்கு போட்டியிட்டனர். மேலும், மூத்த துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் குர்பிரீத் சிங்கும், பா.ஜ.க.வைச் சேர்ந்த குல்ஜீத் சந்தும் போட்டியிட்டனர். துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் நிர்மலா தேவியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் ராஜிந்தர் சர்மா போட்டியிட்டார்.
நேற்று காலை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பிற்பகல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் மொத்தமுள்ள 36 ஓட்டுகளில், 16 ஓட்டுகள் பெற்று பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இதில் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் குமாருக்கு கிடைத்த 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து, பா.ஜ.க குறுக்கு வழியில் வெற்றி பெற்றதாக ஆம் ஆத்மி கடுமையாக விமர்சனம் செய்து குற்றம் சாட்டி வருகிறது. மேலும், 8 வாக்குகள் செல்லாது என அறிவித்ததை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு அவசர வழக்காக இன்று (31-01-24) விசாரணைக்கு வர இருக்கிறது.
இதற்கிடையில், தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டில் பேனாவைக் கொண்டு எழுதும் காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சண்டிகர் மேயர் தேர்தலில், பா.ஜ.க ஜனநாயகத்தை கொன்று குவித்துள்ளது. இப்படிப்பட்ட பா.ஜ.க டெல்லியில் தொடர்ந்து ஆட்சியில் இருக்க என்ன செய்யும் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நாளில் கோட்சே காந்தியை கொன்றார். இன்று கோட்சேஸ்டுகள் அவரது இலட்சியங்களை அரசியலமைப்பு விழுமியங்களை தியாகம் செய்கின்றனர்.