அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியை நீக்கிவிட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி கொண்டு வரப்பட்ட மாற்றங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பிளவு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்தனர். அதன்பிறகு கட்சி நலன் கருதி அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டது. இரு அணிகளும் ஒன்றாக இணைந்தது. அந்த அணிக்கே அ.தி.மு.க. கட்சி பெயரும், இரட்டை இலை சின்னமும் திரும்ப கிடைத்தது.
அதன்பின் அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியை நீக்கிவிட்டு அதற்கு இணையான அதிகாரங்கள் கொண்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கொண்டு வரப்பட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த கட்சி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அமைப்பு ரீதியாக கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையில், அதிமுக கட்சி விதியிலும் அமைப்பு ரீதியாகவும் கொண்டு வரப்பட்ட மாற்றங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கட்சி செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களை கூட்டும் அதிகாரம் பெற்றுள்ளனர்.
மேலும், இதன்மூலம் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிதான் அ.தி.மு.க. என்று அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த முடிவை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.