2024ஆம் ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். அதில், பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து, பெங்களூர், மும்பை என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதே சமயம் தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலையொட்டி இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. மேலும், இந்த சட்டமன்றத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க பெருமளவு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் முதன் முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், மிசோரம் மாநிலத்தில் மிஸோரம் மக்கள் இயக்கம் அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்நிலையில் இந்தியா கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணி கட்சிகளின் 4 வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் 19 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.