பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு விசாரணைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்திற்கு இன்று அவர் அழைத்து வரப்பட்டார். அவர் அழைத்து வரப்படுவதற்கு முன்னதாக வழக்கத்திற்கு மாறாக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். செய்தியாளர்கள் யாரையும் நீதிமன்றத்தின் உள்ளே நுழையவிடாமல் போலீசார் தடுத்துவிட்டனர். நிர்மலாதேவி போலீஸ் வேனில் இருந்து அழைத்து வரப்பட்டபோது செய்தியாளர்கள் யாரையும் அருகே நெருங்க விடவில்லை. பலத்த போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்தே நீதிமன்றத்தின் மேல்தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டார் நிர்மலாதேவி. இத்தனை கெடுபிடிக்கு காரணம் மேலிட உத்தரவா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு போலீசார் பதிலளிக்கவில்லை.
நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து வெளியே வரும் நிர்மலாதேவியை படம் பிடிப்பதற்காக கேமராமேன்கள் காத்திருந்தனர். விசாரணை முடிந்து நிர்மலாதேவி வெளியே வந்து வாகனத்தில் ஏறும்போது செய்தியாளர்கள் மற்றும் கேமராமேன்களை அடித்து நாலாபுறமும் சிதறி ஓடவைத்தனர் போலீசார். இந்த தாக்குதலில் சன் டிவி செய்தியாளர் மணிகண்டனுக்கு கை எலும்பு மூட்டு இறங்கிவிட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். புகைப்படக்காரர்களின் கேமரா உடைந்தது.
வாகனத்தில் ஏறச்சென்ற நிர்மலாதேவியை நெருங்கி, போலீஸ் மிரட்டினார்களா? என்று கேள்வி எழுப்பிய நக்கீரன் நிருபர் சி.என்.ராமகிருஷ்ணனின் கைகளை முறுக்கி கீழே தள்ளினார் இன்ஸ்பெக்டர் பவுல். இதில் நிருபரின் கை கடிகாரம் உடைந்தது.
இதனால் ஆவேசம் அடைந்த செய்தியாளர்கள் டி.எஸ்.பி. ராஜா வாகனத்தை முற்றுகையிட்டு, எங்கள் மீது இப்படி தாக்குதல் நடத்த என்ன காரணம்? மேலிடம் உத்தரவா? பதில் சொல்லுங்கள்? என்று கேட்டனர். கடைசிவரை டி.எஸ்.பி. ராஜா, பதில் சொல்ல முடியாது என்று சென்றுவிட்டார்.