திண்டுக்கல்லை அடுத்த நந்தவனப்பட்டியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் பசுபதிபாண்டியனின் தீவிர ஆதரவாளரான நெல்லை தச்சநல்லூர் சத்திரப்புதுக்குளத்தைச் சேர்ந்த கண்ணபிரானை அவசரம் அவசரமாக திங்களன்று இரவு வேளையில் கைதுச்செய்துள்ளது நெல்லை சிட்டிப் போலீஸ்.. 5 கொலை வழக்குகள் உள்ளிட்ட 21 வழக்குகளைக் கொண்ட இவரைக் கைது செய்தது என்கவுண்டருக்குத் தான் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.
"கடந்த இரு தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை மல்லிகை திருமண மண்டபத்தில் சேலம் மத்தியச்சிறைச்சாலையில் தண்டனைக் கைதியாக இருந்த முத்துக்குமாருக்குத் திருமணம் நடந்துள்ளது. அத்திருமணத்திற்கு அவருடன் அதே சிறைச்சாலையில் தண்டைனையை அனுபவித்த தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாநில இளைஞரணி தலைவர் கண்ணபிரான் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவரான ஜான்பாண்டியனுக்கும் அழைப்பிதழ் சென்றிருக்க, இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே சென்றிருக்கின்றனர். இவ்வேளையில், ஆழ்வார் திருநகரி கேம்பலாபாத் அருகிலுள்ள ஆற்றுப்பாலத்திலிருந்து 6 நபர்கள் கொண்ட கும்பல் ஜான்பாண்டியன் ஆதரவாளர் அழகர்சாமி சென்ற வாகனம் மீது கல்வீசி தாக்கி தப்பித்து ஓடியுள்ளது. " இதனை செய்தது கண்ணபிரான் டீமே.! " என ஆரம்பக் கட்டத்தில் தெரியப்படுத்தினாலும், ஜான்பாண்டியன் அதனை ஏற்கவில்லை என்றே கூறப்படுகின்றது.
அதன் பிறகு ஜான்பாண்டியன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதனை செய்தது, பள்ளமடை பாலமுருகன், மாவடி பன்னீர்முருகன் மற்றும் கண்ணபிரானே என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜான்பாண்டியன் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசியதாக மூவரையும் அவசரம் அவசரமாக கைது செய்துள்ளது போலீஸ் உதவி கமிஷனர்கள் கிருஷ்ணசாமி, சுபாஷ், இன்ஸ்பெக்டர்கள் ராமையா, சோமசுந்தரம், வனசுந்தர் தலைமையில் தனிப்படை போலீசார் டீம். ஜான்பாண்டியன் தரப்பே, அவர்கள் இல்லை என்று கூறியபிறகு இவர்களைக் கைது செய்வது யாரை திருப்திபடுத்த..? இல்லை என்கவுண்டருக்கா..?" என்ற கேள்வி தான் எங்களிடையே நிலவுகிறது." என்கின்றனர் கண்ணபிரான் தரப்பினர். கண்ணபிரானின் கைதைக்கண்டித்து நெல்லை மாநகரக் காவல்துறை எல்கைக்குள் 9 பேருந்துகளும், புறநகர் மாவட்டத்தில் 10 பேருந்துகளுமாக இதுவரை மொத்தம் 12 பேருந்துகள் உடைக்கப்பட்டுள்ளது.
உளவுத்துறை அதிகாரி ஒருவரோ, " பொதுவாக பண்ணையார் குடும்பத்திற்கும், பசுபதி பாண்டியன் குடும்பத்திற்கும் தீராப் பகை. அதனால் இதுவரை பல கொலைகள் நடந்தேறியுள்ளது. பசுபதி பாண்டியனும் கொல்லப்பட, அதற்குக் காரணமானவர்களை பழிக்குப்பழி வாங்குவேன் என சபதமிட்டதோடு கடந்த சில வருடங்களுக்கு முன் பழையகாயலில் உள்ள சுபாஷ்பண்ணையாரின் தோட்டத்திற்குள் புகுந்து வெடிகுண்டு வீசி ஆறுமுகச்சாமி, கண்ணன் ஆகியோரைக் கொன்று தலையை மட்டும் வெட்டி எடுத்து தெய்வசெயல்புரத்திலுள்ள பசுபதிபாண்டியனின் பட்ம் முன் வைத்து தப்பித்தது இவரது டீம். இதில் சுபாஷ்பண்ணையார் தப்பிக்க மீண்டும் பழிவாங்கும் படலம் ஆரம்பித்தது. யார் அசந்தால் யார் தலையை கொய்வது என..?. இந்நிலையில் மீண்டும் சுபாஷ்பண்ணையாரை குறிவைத்து இயங்கியதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைக்க, இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார் கண்ணபிரான். விரைவில் துப்பாக்கி வெடிக்கும்." என்றார் அவர்.
என்கவுண்டருக்கு தயாராகியுள்ளது நெல்லை போலீஸ்..! துப்பாக்கி வெடிக்குமா..?