Skip to main content

 சொந்த மாநிலமான குஜராத்தை விட்டு, தமிழ்நாட்டில்  ஏன் நியூட்ரினோ மையம் அமைக்கிறார் மோடி?-  தி.வேல்முருகன் கொந்தளிப்பு 

Published on 15/03/2018 | Edited on 16/03/2018
well

 

தன் சொந்த குஜராத்தை விட்டு, தமிழ்நாட்டில்  ஏன் நியூட்ரினோ மையம் அமைக்கிறார் மோடி?  அமெரிக்காவுக்கு சேவகம் செய்வதன் மூலம், தமிழ் மண்ணையும் மக்களையும் அழிக்கும் தன் குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ளவா? என தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் கொந்தளித்தார்.  

 

தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

’’சூரியனிலிருந்து காஸ்மிக் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள், எக்ஸ் கதிர்கள் என பல்வேறு கதிர்கள் வெளியாகின்றன. அதில் நியூட்ரினோவும் ஒன்று.  அணுவைப் பிளந்தால் எலெக்ட்ரான், நியூட்ரான், புரோட்டானுடன் நியூட்ரினோவும் உள்ளது என்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

 

நியூட்ரினோ சூரியன், சந்திரன், பூமி என எல்லாப் பொருட்களிலுமே ஊடுருவும். இதனைப் பிடித்து ஆய்வு செய்தால் சூரியன், சந்திரன், பூமியின் தோற்றப்பாடென்ன அதன் வயது, அதனைப் படைத்தது எது அல்லது யார் என்பதற்கும் விடை தெரியும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.  ஆனால் நியூட்ரினோ காஸ்மிக் கதிர்களுடன் சேர்ந்தே காணப்படுவதால் அதை ஆராய்வது கடினம்; ஆகவே மலையைக் குடைந்து பூமிக்கு அடியில் சென்று காஸ்மிக் கதிர்களை தடுத்து நிறுத்தி நியூட்ரினோக்களை மட்டும் ஆய்வு செய்ய வேண்டும்.  இதற்கு நீளம், அகலம், உயரம் ஆகிய பொருத்தப்பாடுடைய மலை என்று தேனி மாவட்டம் பொட்டிபுரம் அம்மரப்பர் மலையை தேர்வு செய்திருக்கிறார்களாம்.

 

மலையின் உச்சியிலிருந்து 1,500 அடி ஆழத்தில் 132 மீட்டர் நீளத்திலும்,  26 மீட்டர் அகலத்திலும்,  20 மீட்டர் உயரத்திலும் இரண்டு குகை அமைக்கப்பட வேண்டும்.  18 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 ராட்சச டேங்கர்கள் கட்டியாச்சு. தற்போது அவற்றில் 54 லட்சம் லிட்டர் தண்ணீரும் தேக்கியாச்சு. அடுத்ததா க 100 அடி சாலை போடுகிறார்கள்.  இவ்வளவு வேகமாக வேலை நடக்கிறதென்றால், இப்போதைய ஈபிஎஸ்-ஓபிஎஸ் அரசு இருக்கும்போதே செய்தால்தான் ஆச்சு. ஏனென்றால் எட்டுத் திக்கும் மக்கள் எதிர்ப்பு.

 

நியூட்ரினோ திட்டம் அஸ்ஸாமில்தான் தொடங்க இருந்தது. அங்கு எதிர்ப்பு ஏற்பட, கர்நாடகாவின் கோலாருக்கு மாற்றப்பட்டது. அங்கும் மிகப் பெரிய போராட்டமே வெடித்தது. அதன் பிறகு தமிழகம் வந்திருக்கிறது.

 

2009-ல் திட்டம் அறிவிக்கப்பட்டதுமே மக்கள்  தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள். அன்றைய ஆட்சியர் முத்துவீரன் அப்பாவி மக்கள் பலரை குண்டர் சட்டத்தில் கைது செய்தார். போராட்டத்தை முளையிலேயே கிள்ளி எறியவும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தவுமே இந்த நடவடிக்கை.

 

கம்பம் பள்ளத்தாக்கில் பொட்டிபுரத்தைச் சுற்றிலும் 55,000 ஏக்கர் நன்செய் நிலம், 18,000 ஏக்கர் தென்னை, வாழை, திராட்சை சாகுபடி புன்செய் நிலம், 10,000 ஏக்கர் பழங்கள், காய்கறிகள் சாகுபடி நிலம் உள்ளன.  இவற்றைச் சுற்றி இரவங்காறு அணை, சண்முகா நதி, சோத்துப்பாறை, வைகை அணை, மஞ்சளாறு, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட அணைகள் உள்ளன. இவை மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும்.  இத்திட்டத்திற்கு  20 லட்சம் டன் கற்கள் உடைக்கப்பட வேண்டும். அந்தக் கற்களை மலையிலிருந்து பெயர்க்க தண்ணீர் தேவை. மின்சாரம் தேவை. 53,000 டன் இரும்பும் 4,000 டன் ஸ்டீலும், 12,000 டன் சிமிண்டும்,  3,500 டன் மணலும் வேண்டும். என்ன செய்வார்கள்?

 

திட்டம் நிறைவேறினால் பொட்டிபுரம்,  புதுக்கோட்டை, ராமகிருஷ்ணம்புரம், தேவாரம், கோம்பை, சின்ன செட்டிபுரம் உள்ளிட்ட பல ஊர்கள் முற்றாக காணாமல் போகக்கூடும்.

உலக நாடுகள் பலவும் இத்திட்டத்தை கைகழுவிவிட்டன. இந்தியா கையிலெடுத்திருக்கிறது என்றால் அது அமெரிக்காவின் அழுத்தத்தால்தான்.  இத்திட்டத்திற்கு 4 ஆயிரம் கோடி ஆகும் என்று கணக்குப் போட்டிருக்கிறார்கள். 4 ஆயிரம் கோடி போட்டு 2 லட்சம் கோடி எடுக்கவும் திட்டம் என்கிறார்கள்.

150 ஆண்டுகளாக தோண்டப்பட்டு இனி நிலக்கரியோ இரும்போ தங்கமோ இல்லை என்று கைவிடப்பட்ட சுரங்கங்களில்தான் ஒன்றிரெண்டு நாடுகள் நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைத்திருக்கின்றன.  இங்கும் சுரங்கத்தை அமைத்துவிட்டு நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க இது தகுதியற்றது என்று சொல்லி அணுக்கழிவுகளைக் கொட்டுவதாகக் கூட இருக்கலாம். அதுவும் சாதாரண ஆபத்தா?   ஆக நியூட்ரினோ திட்டம் ஆபத்தோ ஆபத்து ஆபத்திலும் ஆபத்து!  காரணம் நேர்மை, நாணயம் மருந்துக்கும் கிடைக்காத, வரலாற்றில் இப்படி ஓர் அரசையே காண முடியாத, நம்பகம் என்பதே கிஞ்சிற்றும் இல்லாத அரசாக ஒன்றிய பாஜக மோடி அரசு வந்து வாய்த்திருப்பதுதான்.

 

தன் சொந்த குஜராத்தை விட்டு, தமிழ்நாட்டில் பார்த்து ஏன் நியூட்ரினோ ஆய்வகத்தை மோடி அமைக்க வேண்டும்?  தன் எஜமான் அமெரிக்காதான் நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்கச் சொல்லி அவரைக் கட்டாயப்படுத்துகிறது.  மோடியும் இதுதான் வாய்ப்பு என்று தமிழ் மண்ணையும் மக்களையும் அழித்தொழிக்கும் தன் குறிக்கோளை நிறைவேற்றப் பார்க்கிறார்.

 

மோடிக்காக வாயசைப்பதற்கென்றே தமிழக பாஜக தலைவர் என்றிருக்க, நியூட்ரினோ திட்டத்தில் தமிழக அரசின் நிலைதான் என்ன? ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, மீத்தேன் திட்டத்தை உள்ளடக்கிய  NELP திட்டத்திற்கு எதிராக த.வா.க. போராடும்.’’
 

சார்ந்த செய்திகள்