தமிழ்நாட்டில் குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. ஐ.டி. நிறுவனங்கள், ஹோட்டல்கள் என மூடப்பட்ட நிலையில் இன்று மேன்ஷன்களும் மூடப்பட்டன.
இந்நிலையில், இன்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சட்டத்துறை அமைச்சர் வேலுமணி கலந்துகொண்டார். அப்போது அவர் தெரிவித்தது, பொதுமக்களுக்கு தடையில்லாமல் குடிநீரை விநியோகித்து வருகிறோம்.
குடிநீர் பிரச்சனையை எப்படி சரிசெய்வது என்பது குறித்து அதிகாரிகளுக்கு விரிவான அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு கண்காணிப்பாளர் உள்ளிட்ட நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தொடர்ந்து ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறோம். சென்னையில் மழையில்லாவிட்டாலும் கூடுதலாக தண்ணீரை வழங்கி வருகிறோம்.
மேலும் பேசிய அவர், தண்ணீர் பிரச்சனையில் எந்த ஓட்டல்களையும் மூடவில்லை என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தண்ணீர் பிரச்சனையால்தான் சென்னையில் ஓட்டல்களை மூடிவிட்டனர் என தவறான பரப்புரை செய்து வருகின்றனர். ஓட்டல்களில் வாழை இலை, பாக்குமட்டை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐடி நிறுவன பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவது வழக்கமானதுதான்.
ஐ.டி. நிறுவனங்களில் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டால் நிவர்த்திசெய்ய அரசு தயாராக உள்ளது. 100 நாள் வேலைத்திட்டம் மூலம் நீர் நிலைகள் தொடர்ந்து தூர்வாரப்பட்டு வருகின்றன என தெரிவித்தார். தற்போது முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குடிநீர் பிரச்சனை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்ளனர். குடிநீர் பிரச்சனையால் சென்னை மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சரின் இந்த கருத்து சர்ச்சையாகியுள்ளது.