நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கவேண்டிய அவசியம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாஜக தேசிய தலைவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்த, 2005ஆம் ஆண்டு ஷொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்து வந்தவர் நீதிபதி லோயா. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி திருமண விழாவில் கலந்துகொண்டபோது, திடீரென உயிரிழந்தார். இதையடுத்து, அமித்ஷா மீதான வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி அவரை விடுவிப்பதாக உத்தரவிட்டார். இதனால், நீதிபதி லோயா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலதரப்பிலும் விவாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் ஏராளமான பொதுநல வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்நிலையில், நீதிபதி லோயா மரணத்தில் இருக்கும் மர்மத்தை வெளிக்கொண்டுவர சிறப்பு விசாரணைக்குழுவை நிர்ணயம் செய்யக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்த நிலையில், இதற்கான தீர்ப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா மற்றும் நீதிபதிகள் கன்வில்கர், சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் நாக்பூர் நீதிபதி ஒருவரின் திருமண விழாவில் கலந்துகொண்ட போது அங்கு நீதிபதி லோயாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அதனை உடனிருந்த நீதிபதிகள் கூறும்போது அதை சந்தேகிக்க வேண்டிய காரணம் இல்லை. எனவே, நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணை கோரும் முயற்சி நீதித்துறைக்கு இழுக்கு ஏற்படுத்தும் முயற்சி. லோயாவின் மரணம் இயற்கையானது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.