இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 25 நாட்களுக்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.
தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல், கிட்டத்தட்ட அனைத்து தொலைத் தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை 8,900 அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஐ.நா ஊழியர்கள் 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும். அதில் 70 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
இதனிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி இஸ்ரேலுக்கு சென்றிருந்தார். அங்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்துப் பேசிய ஜோ பைடன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “ஹமாஸ் அமைப்பினர் ஐ.எஸ். பயங்கரவாதிகளை விட மோசமானவர்கள். இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ள தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும். காசா மற்றும் மேற்கு கரையில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக 100 மில்லியன் டாலர் (ரூ.832 கோடி) நிதியுதவியை அமெரிக்கா வழங்கும்” என்று அறிவித்திருந்தார். இதையடுத்து, இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் இதுவரை 9,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 22,000க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் மினியா போலிஸ் நகரில் தேர்தல் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசிக்கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர், போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு பதில் அளித்த ஜோ பைடன், “இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் இடைநிறுத்தம் தேவை. இடைநிறுத்தம் என்பது பிணைக் கைதிகளை வெளியேற்றுவதற்கான நேரத்தை கொடுப்பதாகும்” என்று கூறினார்.