நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருக்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் செய்யாத்துரை. இவர் அரசு முதல் நிலை காண்டிராக்டர். இவருக்கு கருப்பசாமி, ஈஸ்வரன், நாகராஜ், பாலசுப்பிரமணியன் ஆகிய 4 மகன்கள் உள்ளனர். செய்யாத்துரை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைகளில் நடைபெறும் பல்வேறு சாலைப்பணிகள், கட்டிட கட்டுமான பணிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதும் செய்து வருகிறார்.
தற்போது மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து கப்பலூர் வரையிலான சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிக்கான ஒப்பந்தத்தை சேகர்ரெட்டி என்பவர் எடுத்து இருந்தாலும் அந்தவேலையை செய்யாத்துரையே செய்து வருகிறார். இதே போல் விருதுநகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளை 5 ஆண்டுகளுக்கு பராமரிக்க சுமார் ரூ.600 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது.
அருப்புக்கோட்டை, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் முக்கிய சாலை அமைக்கும் பணிகளும், கட்டுமான பணிகளும் நடப்பதால் அங்கு அலுவலகங்களும் உள்ளன. இவருக்கு கல்குறிச்சியில் நூற்பாலையும், கல்லூரணி பகுதியில் ஒரு கல்குவாரியும் உள்ளன. மேலும் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் எஸ்.பி.கே. என்ற 5 நட்சத்திர ஓட்டலும் உள்ளது.
இந்த நிலையில் பாலையம்பட்டியில் உள்ள அவரது வீடுகளுக்கு நேற்று காலை 6 மணி அளவில் வருமான வரித்துறையினர் 5 கார்களில் வந்து அதிரடியாக நுழைந்தனர். வீட்டிற்குள் இருந்த யாரையும் வெளியே செல்லவும், யாரும் உள்ளே வரவும் அனுமதி மறுக்கப்பட்டது. 16-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
செய்யாத்துரைக்கு சொந்தமான 3 வீடுகள் மற்றும் நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடைபெற்றது. செய்யாத்துரையின் மகன்கள் கருப்பசாமி, பாலசுப்பிரமணியன் ஆகியோரை அழைத்து விசாரணை செய்து பின்னர் கருப்பசாமியை விருதுநகர் ரோட்டில் உள்ள வங்கிக்கு காரில் அழைத்துச் சென்றனர். அங்கும் விசாரணை மேற்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் 50 இடங்களில் 200 வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, நேற்று காலை 6 மணி முதல் சோதனையை மேற்கொண்டு உள்ளனர்.
இந்த நிலையில், நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாத்துரைக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.160 கோடி பணம், 100 கிலோ தங்கம் சிக்கியது, முக்கிய ஆவணங்கள் சிக்கின. 2-வது நாளாக அங்கு சோதனை நடைபெற்று வருகிறது.