சென்னை அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி வன்கொடுமை வழக்கில் 17 பேருக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 17 பேரிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பின்னர் வரும் 24ம் தேதி வரை 17 பேரின் காவலை நீட்டித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை 31ல் நடைபெற்ற விசாரணையில் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 17 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இன்றைய விசாரணையில் காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது மாற்றுத்திறன் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக எழுந்த புகாரில் குடியிருப்பில் வேலை செய்த 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் சிறையில் அடைப்பதற்காக கடந்த 17ம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது அங்கிருந்த வழக்கறிஞர்கள் 17 பேர் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தினர். பின்பு போலீசார் நீண்ட போராட்டத்துக்கு பின் கைதிகளை மீட்டு சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குறித்து சிறையில் உள்ள 17 பேரிடமும் விசாரணை நடத்த வேண்டி உள்ளது என சென்னை மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை மீண்டும் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட நேரிடும் என்ற காரணத்தால், சென்னை புழல் சிறைக்கே சென்று 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி, போலீசார் குற்றவாளிகளை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, போலீசார் விசாரணை முடிந்து குற்றவாளிகள் 17 பேரையும் ஜுலை மாதம் 31ம் தேதி சென்னை புழல் சிறைக்கு கொண்டு வந்தனர்.
அப்போது மீண்டும் புழல் சிறைக்கு சென்ற நீதிபதி மஞ்சுளா, குற்றவாளிகளிடம் 5 நாள் போலீஸ் காவல் குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் அனைவரையும் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். அதன்படி இன்று மீண்டும் இவ்வழக்கை வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரித்த மகளிர் நீதிமன்றம் 17 பேரின் காவலையும் ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.