18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வராவிட்டால் மேல்முறையீடு செய்யமாட்டேன் என டிடிவி ஆதரவாளர் தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று காலை சென்னை பெசன்ட்நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு 100 சதவீதம் எங்களுக்கு சாதகமாகதான் வரும். எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை என்றால் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டுக்கு செல்ல நான் தயாராக இல்லை. நான் உள்பட 18 உறுப்பினர்களும் அதிமுக உறுப்பினர்கள் தான். எங்களை ஏன் எங்களை கட்சியை விட்டு நீக்கவில்லை? தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தால் சட்டமன்றத்தில் ஜனநாயக கடைமையாற்ற தயாராக உள்ளோம் என்றார்.
தொடர்ந்து அவரிடம், 18 எம்.எல்.ஏக்களில் சிலரை எடப்பாடி பழனிசாமி தரப்பு இழுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது என கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு பதிலளித்த அவர், நாங்கள் 18 பேரும் சுற்றிக்கொண்டு தான் இருக்கிறோம். 18 பேரையும் இழுத்தால் இழுக்கட்டும். எங்களுக்கு பிரச்சனை இல்லை.
நீங்கள் செல்லத் தயாரா? என்ற கேள்விக்கு... எங்களை அழைத்து அவர் என்ன செய்யபோகிறார்? பெரும்பான்மையை நிரூபிப்பது அப்புறம். முதலில் நாங்கள் எங்கள் ஜனநாயக கடைமையாற்ற வேண்டும். எங்களை சட்டமன்றத்தில் அமர வையுங்கள். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. முதலில் சட்டமன்றம் செல்ல விடுங்கள் பின்னர் என்ன செய்வோம் என்பதை பார்க்கலாம்.
தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வந்தால், இடைத்தேர்தலை சந்திக்க 100 சதவீதம் தயாராக உள்ளோம். இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், 18 பேரும் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏவாக வெற்றி பெறுவோம். 18 பேரில் ஒருவர் இடைத்தேர்தலில் தோல்வியடைந்தாலும் அனைவரும் பதவி விலகுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
படம்: அசோக்குமார்