![rajini](http://image.nakkheeran.in/cdn/farfuture/u7dUMxKVodBX-utst8YSJP7vtSD1N9Q0_fwEfsOP8IA/1533347672/sites/default/files/inline-images/raj%20ss.jpg)
ஈரோட்டில் சாலையில் கேட்பாரற்று கிடந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசிடம் ஒப்படைத்த சிறுவன் முகமது யாசின், சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பாராட்டு பெற்றான்.
இதையடுத்து, போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்,
ரொம்ப பெருமையாக இருக்கிறது. பணம் என்று சொன்னால், பிணம்கூட வாய்பிளக்கும் என்று சொல்வார்கள். பணத்திற்காக ஏமாற்றுவது, கொள்ளையடிப்பது, கொலை செய்வது என்று இருக்கும் இந்த காலத்தில் சாலையில் கிடைத்த பணம், என் பணம் இல்லை என்று திரும்பி கொடுத்துள்ளான் சிறுவன். அது உண்மையிலே மிகப்பெரிய குணம். இந்த சிறுவனை எப்படி வாழ்த்துவது என்று தெரியவில்லை. இப்படி சிறுவனை பெற்றவர்களையும், வளர்த்தவர்களையும் மனமாற வாழ்த்துகிறேன்.
தற்போது, அரசு பள்ளியில் படித்து வருகிறான் சிறுவன், அங்கேயே படிக்கட்டும் என கூறியுள்ளேன். அதன்பிறகு அவன் என்ன படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் நான் அவனை படிக்க வைக்கிறேன். என் பையனாக சிறுவன் யாசினைத் தத்தெடுத்துக்கொள்வதாக அவனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளேன்.
நிச்சயம் இது போன்ற சிறுவர்கள் மற்றவர்களுக்கு பெரும் உத்வேகம் தருகிறார்கள். இதற்காக நான் ரொம்ப பெருமைப்படுகிறேன். காமராஜரின் பிறந்தநாளான இன்று அவரையும் ஞாபகப்படுத்திக்கொண்டு சிறுவன் யாசினை நான் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.