Skip to main content

விஸ்வரூபம் எடுக்கும் காந்தி மார்கெட் தொழிலாளர்களின் பிரச்சனை!!!

Published on 09/07/2018 | Edited on 09/07/2018

திருச்சியில் என்றைக்கு ‘காந்தி மார்கெட் மாற்றப்படும்’ என்று அறிவிப்பு வந்ததோ அன்றிலிருந்து தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டமும், அவர்களிடம் பதட்டமும் தொற்றிக்கொண்டே இருக்கிறது. 
 

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் முத்திரையர் சங்க தலைவர் ஆர்.விஸ்வநாதனிடம் இடத்தை புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் சொந்தமாக ஆரம்பிக்கப்பட்ட வெங்காய மண்டியில் வேலை கேட்டு பழைய வெங்காய மண்டி தொழிலாளர்களின் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த பிரச்சனையை சுமுகமாக தீர்த்து வைக்கும் படி திருச்சி மாநகர போலீஸ் ஆணையர் அமல்ராஜீடம் மனு கொடுத்தனர் பழைய வெங்காய மண்டி தொழிலாளர்கள். திருச்சி காந்தி மார்க்கெட் சப்ஜெயில் ரோட்டில் உள்ள வெங்காய மண்டி அரியமங்கலம் பழைய பால்பண்ணை அருகே சொந்த கட்டிடத்திற்கு இடம் மாற்றப்பட்டது. புதிய வெங்காய மண்டி வியாபாரிகள் புதிதாக சுமை தூக்கும் தொழிலாளர்களை பணியமர்த்திக் கொண்டனர். பழைய வெங்காய மண்டியில் சுமை தூக்கும் தொழில் செய்து வந்த தொழிற்சங்க உறுப்பினர்களை புதிய வெங்காய மண்டியில் அனுமதிக்கவில்லை. 
 

 

 

இதனால் வெங்காய மண்டி வியாபாரிகளுக்கும், பழைய சுமை தொழிலாளர்களுக்கும் பிரச்னை நீடித்து வருகிறது. வியாபாரிகள் தரப்பில் நாங்கள் விரும்புகிறவர்களையே சுமை தொழிலாளர்களாக வைத்துக்கொள்வோம் எனக்கூறி விட்டனர். இதனை ஏற்றுக்கொள்ளாத பழைய சுமை தூக்கும் தொழிலாளர்கள் புதிய வெங்காய மண்டியில் தங்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று கூறி குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்றுமுன்தினம் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் தொமுச, சிஐடியூ தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் 5 பேர் மட்டும் டிஆர்ஓ (பொ) சங்கர நாராயணனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் போலீஸ் அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும், வியாபாரிகளும் கலந்து கொண்டனர். இரவு 7.45 மணி வரை நடந்த பேச்சுவார்த்தையில் வியாபாரிகள் தரப்பில் தாங்கள் நியமித்த தொழிலாளர்கள் 50 சதவீதம் பேரும், தொழிற்சங்கத்தை சேர்ந்த 50 சதவீதம் பேரும் வேலை செய்யலாம் என ஒரு உடன்பாடு முன் வைக்கப்பட்டது. இதனை தொழிற்சங்கத்தினர் ஏற்கவில்லை. இதனால் கூட்டத்தில் எந்த உடன்பாடும் ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து சுமை தூக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் பழைய வெங்காய மண்டியில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என போலீசார் எச்சரித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில் தொழிற்சங்கத்தினர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். 
 


அப்போது, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் போலீஸ் நடவடிக்கை எடுக்கும். மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடன் பேசி முடிவு காணுங்கள் என கூறி அனுப்பி வைத்தார். இந்த போராட்டம் குறித்து சிஐடியூ சுமை தூக்கும் தொழிலாளர் சங்க செயலாளர் ராமர் கூறுகையில், 70 வருடமாக தொழிற்சங்கத்தினர் இங்கு மூட்டை தூக்கி வருகிறார்கள். பழைய வெங்காய மண்டியில் இருந்த கணக்கப்பிள்ளை புதிய மார்க்கெட்டுக்கு போகிறார். ஏன் மேஜை, நாற்காலி கூட சென்று விட்டது. ஆனால் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மட்டும் அங்கு வேலை இல்லை என்பது என்ன நியாயம். எங்களுக்கு 100 சதவீதம் வேலை கொடுக்காவிட்டால் போராட்டம் தொடரும் என்றார்.
 

 

 

இந்த நிலையில் காந்திமார்கெட்டில் உள்ள 2000 தொழிலாளர்களும் 277 சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் இணைந்து போராட்டத்தை கையில் எடுத்தால் காந்தி மார்கெட் பகுதி உள்ள இங்கீலிஷ் காய்கறி மண்டி, வாழைக்காய் மண்டி, ரயில்வே குட்செட், உருளைகிழங்கு மண்டி, லோடுமேன், அரிசி மண்டி, தேங்காய் மண்டி, பூசணிக்காய் மண்டி, வேஸ்ட் பேப்பர், பழக்கடை மண்டி ஆகிய இடங்களில் வேலைபார்க்கும் தொழிலர்கள் அனைவரும் தங்கள் பணிகளை நிறுத்தி வேலை நிறுத்ததில் ஈடுபட்டு உள்ளதால் காந்திமார்கெட் பகுதியில் சட்டஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலைக்கு தள்ளியுள்ளது. 
 

நேற்று நள்ளிரவு தொழிலார்களின் குடும்பம் குடும்பமாக போராட்ட இடத்திற்கு குவிந்தால் அந்த பகுதியே போராட்டகளமாக மாறியது. காவல்துறைக்கும், தொழிலாளர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு, தடியடி நடத்தும் அளவிற்கு மாறியது. காந்திமார்கெட் பகுதியில் எந்தவித சரக்குகளை ஏற்றவிடாமல் கடைசி வரை தொழிலாளர்கள் தடுத்தனர். 
 

 

 

போராட்ட குழுவினர் இடையே இன்று 09.07.2018 டி.ஆர்.ஓ. தலைமையில் இன்று பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யபப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக திருச்சி மார்கெட் பகுதியில் நீடித்துள்ள இந்த தொழிலாளர்கள் பிரச்சனையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. காய்கறிகள் வந்தும் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்