நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழு கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.
காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் பாஜக போட்டியிடாமல் அந்த மாநிலத்தில் உள்ள மாநில கட்சிகளுக்கு ஆதரவளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2019 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மேகாலயாவில் இரண்டு தொகுதியிலும், மணிப்பூரில் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டு தோற்றது. இந்நிலையில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரே மணிப்பூரில் நிகழ்ந்த கலவரம் பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்த நிலையில் மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் போட்டியிடாமல் மாநில கட்சிகளுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை பாஜக எடுத்துள்ளது.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் அறிவுறுத்தலின்படி இந்த தகவலை பகிர்வதாக வடகிழக்கு மாநிலங்களின் பாஜக தேர்தல் பொறுப்பாளர் சம்பித் பத்ரா சமூக வலைத்தளமான எக்ஸ் வலைதள பக்கத்தில் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
கலவரத்தில் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு இதுவரை பிரதமர் மோடி வந்து சேரவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில் பயம் காரணமாக தேர்தலிலும் மணிப்பூருக்கு பாராமுகம் காட்டியுள்ளார் மோடி என விமர்சனங்கள் எழுந்துள்ளது.