நாகராஜன் – செய்யாதுரை வீடுகளில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை மூலம் 174 கோடி ரூபாய் பணம் 105 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பினாமியும், அவரது சம்பந்தியும் தமிழ்நாட்டில் நடத்திய ஊழல் கொண்டாட்டம் வெளிவந்திருக்கிறது. ஆனால் ஐடி ரெய்டு குறித்து முதல்வர் பழனிசாமி மெளனமாக இருப்பது ஏன்? என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில், இன்றைய நமது அம்மா நாளிதழில், ‘முந்திரிக்கொட்டைத் தனமும், முதிர்ச்சியின்மை குணமும்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில்,
பெரும் வணிகர்கள், பெரும் நிலக்கிழார்கள், தொழிலதிபர்கள், அரசு ஒப்பந்தக்காரர்கள், திரை நட்சத்திரங்கள் என பெருந்தொகை ஈட்டுகிற பிரபலங்களின் வீடுகளுக்கு வருமான வரித்துறை சென்று சோதனைகள் நடத்துவதும், வரி செலுத்துவதில் குறைபாடுகள் இருந்தால், அதற்காக அபராதங்கள் விதிப்பதும், சில நேரங்களில் வழக்குகள் தொடுப்பதும் என இவையெல்லாம் காலாகாலத்திய வாடிக்கை நிகழ்வுகள்தான்.
ஆனால் ஊடகங்களில் இது போன்ற சோதனைகளையெல்லாம் பிரேக்கிங் நியூஸாக்கி பரபரப்பு கூட்டுகின்றனர். அப்படி நடக்கிற வருமான வரிச் சோதனைகளில் அரசியல் தலைவர்களின் உறவினர்கள் எவரேனும் இருந்தால், அதனை பூதாகரமாக்கி அரசியல் ஆதாயங்களுக்கு ஆகாரமாக்குவது என்பது இப்போது வழக்கமாகியிருக்கிறது.
அப்படித்தான், கடந்த சில நாட்களாக அரசு ஒப்பந்தக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என ஒரு நீண்ட பட்டியலை குறி வைத்து நடத்தப்பட்டு வரும் வருமான வரிச்சோனையை அரசியாலக்க, செயல்தலைவர் ஸ்டாலின் வெகுவாக முயற்சித்து விரைந்தோடி வந்து அறிக்கை விட்டிருக்கிறார்.
வருமான வரித்துறை சோதனை நிறைவுறுவதற்கு முன்பு வருமான வரித்துறை எத்தகைய விவரங்களையும் வெளியிடுவதற்கு முன்னதாக தன்னை ஒரு துப்பறிவாளனாக கற்பனை செய்து கொண்டு மு.க.ஸ்டாலின் முந்திரிக்கொட்டைத்தனத்தைக் காட்டியிருப்பது அவரது முதிர்ச்சியின்மையைத்தானே காட்டுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.