Skip to main content

அமைச்சர் கல்லூரியில் இருந்து வெளியேறிய கண்டெய்னர்! அதற்குள் இருப்பது என்ன?

Published on 14/03/2021 | Edited on 14/03/2021
ttttt

 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் 3வது முறையாக அதிமுக கூட்டணி வேட்பாளராக அமைச்சர் விஜயபாஸ்கரும் திமுக கூட்டணி சார்பில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த திமுக தென்னலூர் பழனியப்பனும் போட்டியிடுகின்றனர். 

 

அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த சில நாட்களாக தொகுதிகளை சுற்றி வருகிறார். இந்த நிலையில்தான் கடந்த வாரம் திமுக மா.செ (பொ) செல்லப்பாண்டியன் தலைமையிலானோர் விராலிமலை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் ஒன்று கொடுத்தனர். அந்தப் புகாரில்.. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அவரது மேட்டுச்சாலை கல்லூரியில் பரிசுப் பொருட்களை வைத்திருப்பதாகவும் அதனை சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.


ஆனால் தேர்தல் அதிகாரிகள் அந்த புகார் குறித்து எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் திமுகவினர் புகாரில் குறிப்பிட்டிருந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் மேட்டுச்சாலை மதர்தெரசா கல்லூரி வளாகத்தில் இருந்து இன்று காலை 11.20 மணிக்கு ஆந்திர பதிவு எண் ( ஏபி 99 யூ 9755) கொண்ட ஒரு கண்டெய்னர் வெளியேறி புதுக்கோட்டை நோக்கி சென்றது. போன வாரம் திமுக புகார் கொடுத்த நிலையில் இந்த வாரம் ஒரு கண்டெய்னர் வெளியேறியது பரபரப்பாக உள்ளது. தேர்தல் அதிகாரிகள் தான் அந்த கண்டெய்னரில் என்ன இருந்தது என்பதை சொல்ல வேண்டும் என்கின்றனர் திமுகவினர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.