Skip to main content

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பல்கலைக்கழகங்கள்; தீர்வு காண அன்புமணி வலியுறுத்தல்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Chennai University, Madurai Kamaraj University Financial Crisis

சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழக நிதி நெருக்கடிக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

சென்னைப் பல்கலைக்கழகமும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகமும் வெவ்வேறு காரணங்களால் கடுமையான நிதி நெருக்கடியை  எதிர்கொண்டு வருகின்றன. அதற்கு தீர்வு காண வேண்டும் என்று இரு பல்கலைக்கழகங்களின் பணியாளர்களும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண  தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும்  எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கும் கடந்த டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை. அதேபோல், ஓய்வூதியர்களுக்கும் இரு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதைக் கண்டித்தும், உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அங்குள்ள பணியாளர்கள் கடந்த 9 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசுத் தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

காமராசர் பல்கலைக்கழகத்தின் அவசரத் தேவைகளுக்காக வைக்கப்பட்டிருந்த மூலதன நிதி ரூ.300 கோடி ஏற்கெனவே செலவு செய்யப்பட்டு விட்ட நிலையில், பல்கலைக்கழக நிதி ஆதாரங்கள் அனைத்தும் வறண்டு விட்டன. அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும். ஆனால், அரசுத் தரப்பில் நிதியுதவி வழங்கப்படாத நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே குறித்த காலத்தில் ஊதியம் வழங்க முடியவில்லை. இப்போது இரு மாதங்களாக ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதுடன், இம்மாதத்திற்கான ஊதியத்தையும் வழங்க இயலாத நிலை உருவாகியுள்ளது. இது மிகவும் மோசமான நிலை ஆகும்.

இன்னொருபுறம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகளை வருமானவரித் துறை முடக்கி வைத்திருப்பதால், அதன் விடுதிகளில்  மாணவர்களுக்கு உணவு  வழங்குவதற்கு கூட  தடுமாறும் நிலை உருவாகியுள்ளது. பல்கலைக்கழகம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவை செலுத்தினால் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க தயாராக இருப்பதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் நேற்று உண்ணாநிலை போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனாலும் அரசுத் தரப்பிலிருந்து எந்த உதவியும் வழங்கப்படவில்லை.

2017-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை வருமானவரித்துறைக்கு  சென்னை பல்கலைக்கழகம் ரூ.424 கோடி  வரி பாக்கி வைத்திருக்கிறது.  அதற்கான முதன்மைக் காரணம், சென்னைப் பல்கலைக்கழகங்களின் நியமனங்கள், பதவி உயர்வுகள் ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் காரணமாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் நிதியை தமிழக அரசு குறைந்து வந்ததுதான். அதனால் தான் சென்னைப் பல்கலைக்கழகம் ஓய்வூதிய நிதி உள்ளிட்டவற்றை ஊதியம் வழங்க பயன்படுத்தியது என்பதை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன்.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை சென்னைப் பல்கலைக்கழகத்திடம் ரூ.500 கோடி வரை உபரி நிதி இருந்தது. ஆனால், பல்கலைக்கழகத்தின் செலவுகளுக்கு தமிழக அரசு போதிய நிதி, மானியத்தை வழங்கத் தவறியதுதான் நிதிநிலை அறிக்கை மோசமடைந்ததற்கு காரணம் ஆகும். அதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இந்நிலையிலிருந்து பல்கலைக்கழகம் மீளவும் அரசு தான் உதவ வேண்டும். ஆனால், தமிழக அரசோ இதை பல்கலைக்கழகத்தின் பிரச்சினையாகக் கருதி, எந்த உதவியும் செய்யாமல் ஒதுங்கி நிற்கிறது. இது  பெரும் தவறு.

தமிழ்நாட்டின் முதன்மையான பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம். பெருந்தலைவர் காமராசர் அவர்களால் உருவாக்கப்பட்டு, பின்னாளில் அவரது பெயரையே தாங்கி நிற்கும் கல்வி நிறுவனம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம். தமிழ்நாட்டின் அடையாளங்களாக திகழும் இந்த இரு பல்கலைக்கழகங்களும் முடங்கி விடாமல் காக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. எனவே,  மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியிலிருந்து மீட்கவும்,  சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்கு முடக்கத்தை  நீக்கவும் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்