மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சச்சின் குமார் ஜெயின் (வயது 31). இவர் சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.யில் பி.எச்.டி படித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் வேளச்சேரியில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்துள்ளார். இந்த சூழலில் சச்சின் குமார் ஜெயின், கடந்த மார்ச் 31 ஆம் தேதி காலை வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்றுள்ளார். ஆனால், கல்லூரியில் காலை வகுப்பு முடிந்ததும் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இதனையடுத்து, சச்சின் குமார் ஜெயினுடன் தங்கியிருந்த மாணவர்கள் கல்லூரி முடித்து வீடு திரும்பினர். அப்போது சச்சின் குமார் ஜெயின் வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு மரணித்த நிலையில் இருந்துள்ளார். இதனைக் கண்டு பதறிய அவரது நண்பர்கள், உடனடியாக வேளச்சேரி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த வேளச்சேரி போலீஸார், சச்சின் குமார் ஜெயினின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை ஐஐடியின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவு பேராசிரியர் ஆசிஷ்குமார் சென்னின் துன்புறுத்தல் காரணமாக சச்சின் குமார் ஜெயின் தற்கொலை செய்து கொண்டதாக அவரது சகோதரர் புகார் அளித்திருந்தார். புகாருக்கு உள்ளான பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஐஐடி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டத்தையடுத்து மாணவர் சச்சின் குமார் ஜெயின் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த தமிழக முன்னாள் போலீஸ் டிஜிபி திலகவதி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை சென்னை ஐஐடி அமைத்திருந்தது.
இந்த குழுவின் விசாரணையின் முடிவில் மாணவர் சச்சின் குமார் ஜெயின் தற்கொலைக்கு பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் துன்புறுத்தலே காரணம் என ஐவர் குழு அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்த குழு பரிந்துரை செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
ஐவர் குழு மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட மாணவர் சச்சின் குமார் ஜெயின் மட்டுமின்றி மேலும் பல மாணவர்கள் துன்புறுத்தப்பட்டனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஐஐடியில் கடந்த பிப்ரவரி கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் மட்டும் 4 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.