ராமர்பாலத்தை அகற்ற முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிராமாண பத்திரத்தில் கூறியுள்ளது.
பாக் நீரிணைப்பு மற்றும் ராமர் பாலம் பகுதிகளை ஆழப்படுத்தி, கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் திட்டமே சேதுசமுத்திரத் திட்டம். இதன்மூலம், பலவிதமான நலன்கள் கிடைக்குமானாலும், பல்வேறு காரணங்களால் இந்தத் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக்கோரி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத்தில், ‘ராமர் பாலத்தை அகற்ற முடியாது. ஆனால், அதை சேதப்படுத்தாமல் மாற்று வழியின் மூலம் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என தெரிவித்துள்ளது.