நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
அதே சமயம் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான 5 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. அதில் ஆந்திர பிரதேசம், பீகார், கோவா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, மேற்கு வங்கம் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான 111 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் ஹரியானா மாநில காங்கிரஸ் முன்னாள் எம்.பி. நவீன் ஜிண்டால் அக்கட்சியில் இருந்து விலகிய அடுத்த ஒரு மணி நேரத்தில் பா.ஜ.க.வில் இணைந்தார். அவ்வாறு இணைந்த உடன் பா.ஜ.க. சார்பில் ஹரியானாவின் குருஷேத்ரா தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார்.
ஹரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் பா.ஜ.க. சார்பில் நவீன் ஜிண்டால், ஒடிசா மாநிலம் சம்பல்பூர் தொகுதியில் தர்மேந்திர பிரதான் களமிறங்குகின்றனர். மக்களிடம் வரவேற்பை பெற்ற பிரபல தொலைக்காட்சித் தொடரான ராமாயணத்தில் ராமராக நடித்த நடிகர் அருண் கோவில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரட் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி. ராம ராவின் மகளும், அம்மாநில பா.ஜ.க. தலைவருமான புரந்தேஷ்வரி ஆந்திராவின் ராஜமுந்திரி தொகுதியில் போட்டியிடவுள்ளார்.