டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்து வந்தார்.
அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி முதலமைச்சர் தொடர்ந்த வழக்கில் பல கட்டங்களாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இடைக்கால ஜாமீன் கோரிய வழக்கில் கடந்த 10ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான உத்தரவை பிறப்பிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதே சமயம், ஜூன் 2 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட மட்டுமே அனுமதி அளித்தும், முதலமைச்சராக அலுவல் பணிகளில் ஈடுபடக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு உத்தரவிட்டது.
கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் வழங்கிய பிறகு, கடந்த 10ஆம் தேதி மாலை திகார் சிறையிலிருந்து அவர் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில், நேற்று (12-05-24) டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மக்களவைத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி சார்பில் 10 உத்தரவாதங்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டார். அதன் பிறகு பேசிய அவர், “வாக்காளர்கள், ஆம் ஆத்மி தேர்தல் சின்னத்தை அழுத்தினால், நான் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டியதில்லை. உங்கள் கையில் அதிகாரம். உங்கள் பிள்ளைகள் நல்ல கல்வியைப் பெறவில்லை. உலகத்தரம் வாய்ந்த பள்ளிகளை உருவாக்கினேன். இது என் தவறா? சிகிச்சைக்காக, தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து வருகிறீர்கள். நான் மொஹோலா கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளை உருவாக்கி மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்தினேன். இது என் தவறா?.
எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. நான் தினமும் 52 யூனிட் இன்சுலின் எடுத்துக்கொள்கிறேன். திகார் சிறைக்குள் 15 நாட்களாக இன்சுலின் கொடுக்கவில்லை. நான் மீண்டும் சிறைக்குச் சென்றால், பாஜக உங்கள் வேலையை நிறுத்தும், இலவச மின்சாரம், பள்ளிகளைச் சீரழிக்கும், மருத்துவமனைகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளை மூடும். நாட்டின் அரசியலமைப்பை மாற்றி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார்கள். நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. இந்த சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்று கூறினார்.