சமூக செயற்பாட்டாளரும், கல்வியாளருமான ஆனந்த் டெல்டும்டே, உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ஷானிவர்வாடா பகுதியில், கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி எல்கர் பரிஷத் என்ற மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் கலந்துகொண்டு உரையாற்றினர். இதற்கு மறுநாள் பீமா கோரேகான் எனும் பகுதியில் மிகப்பெரிய கலவரம் உருவானது. இந்தக் கலவரத்திற்கும் எல்கர் பரிஷத் மாநாட்டிற்கும் தொடர்பிருப்பதாகக் கூறிய புனே காவல்துறை, மாவோயிஸ்டுகளின் சதி இதில் இருப்பதாக தெரிவித்து அருண் பெரெய்ரா, வெர்னன் கோன்ஸ்லேவ்ஸ், சுதா பரத்வாஜ், வரவர ராவ் மற்றும் கவுதம் நவ்லகா உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். கவுதம் நவ்லகா தவிர மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இதில் கல்வியாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறி, தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அவரைக் கைதுசெய்ய நான்கு வாரங்கள் தடை விதித்திருந்தது. இந்த கால அவகாசத்திற்குள் கீழ் நீதிமன்றங்களில் முன்ஜாமீன் பெற்றுவிட்டால் ஆனந்த் டெல்டும்டே கைது செய்யப்படுவது தடுக்கப்படும் என்றிருந்தது. ஆனால், வெள்ளிக்கிழமையன்று புனே நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கில் நீதிபதி முன்ஜாமீன் தர மறுத்துவிட்டார். இதைக் காரணமாக வைத்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் மும்பை விமானநிலையத்தில் வைத்து ஆனந்த் டெல்டும்டேவை மும்பை போலீஸார் கைதுசெய்தனர். புனே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆனந்த் டெல்டும்டே இன்று புனே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனாலும், உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடு பிப்ரவரி 11 வரை இருக்கும்பட்சத்தில், ஆனந்த் டெல்டும்டேவைக் கைது செய்திருப்பது உள்நோக்கம் மற்றும் சட்டவிரோதமானது என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துவருகின்றனர்.