கோவை மாவட்டம் சிக்காரம்பாளையத்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து இந்த ஆலை செயல்படாத முடியாத சூழல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அதன் உரிமையாளர் இந்த ஆலையை வேறு ஒருவருக்கு விற்றதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் புதிய உரிமையாளர் பல மாதங்காளாக செயல்படாமல் இருந்த ஆலையில் பராமரிப்பு பணி மேற்கொண்டுள்ளார். அப்போது தொழிற்சாலையில் இருந்த சிலிண்டரில் இருந்து எதிர்பாராதவிதமாக அமோனியா வாயு கசிந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனையடுத்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த வாயு கசிவு சம்பவத்தால் ஆலையைச் சுற்றியுள்ளா 2 கி.மீ. தொலைவிற்கு வசிக்கும் சுற்றுவட்டார பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல், சுவாசப் பிரச்சணை போன்ற பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் தொழிற்சாலையை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் தனியார் மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் 108 ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் நிலைமை முழுமையாக சீரான பிறகு இன்று (30.04.2024) சுகாத்தாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை நடத்திய பிறகு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப உள்ளனர். தொழிற்சாலையில் நடைபெற்ற பராமரிப்பு பணியின் போது அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.