இந்தியாவில் அரசியல் சாசனம் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் கடந்த 4 நாட்களாக சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் பேசினர்.
இந்த விவாதத்தின் முடிவில் மாநிலங்களவையில், நேற்று (17-12-24) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது அவர், “அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக, கடவுளின் பெயரை இவ்வளவு சொல்லியிருந்தால், அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பா.ஜ.க மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் கட்சி பேச வேண்டும்” என்று பேசினார்.
அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமித்ஷா பேசியிருந்ததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது, “மனுஸ்மிருதி மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அம்பேத்கர் பிரச்சனையாகத்தான் தெரிவார்” என்று குறிப்பிட்டிருந்தார். அதே போல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருப்பதாவது, “உள்துறை அமைச்சர், பாபாசாகேப் அம்பேத்கரை அவமதித்ததன் மூலம், பாஜக-ஆர்எஸ்எஸ் மூவர்ணக் கொடிக்கு எதிரானது, அவர்களின் முன்னோர்கள் அசோக் சக்ராவை எதிர்த்தார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். சங்பரிவார் மக்கள், முதல் நாளிலிருந்தே இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக மனுஸ்மிருதியை நடைமுறைப்படுத்த விரும்பினர். பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் இதை அனுமதிக்கவில்லை, அதனால்தான் அவர் மீது இவ்வளவு வெறுப்பு இருக்கிறது.
என்னைப் போன்ற கோடிக்கணக்கான மக்களுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் கடவுளுக்குக் குறைவானவர் அல்ல என்பதை மோடி அரசின் அமைச்சர்கள் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும். பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் ஏழைகளின் தூதராக அவர் எப்போதும் இருப்பார்” என்று தெரிவித்திருந்தார். அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் இதுகுறித்து விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி, திமுக எம்.பி டி.ஆர்.பாலு உள்ளிட்ட இந்தியா கூட்டணியினர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து கையில் அம்பேத்கர் புகைப்படம் ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், அவர்கள் ‘ஜெய் பீம்’ என்று முழக்கமிட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகள், அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவதால், நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளும் இன்று (18-12-24) 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.