வருகிற 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு தேர்தலைச் சந்திக்கவேண்டும் என காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் 84ஆவது மாநாடு கடந்த இரண்டு நாட்களாக நடந்துவருகிறது. இந்த மாநாட்டின் இறுதிநாளான இன்று, கட்சியின் தலைவரான ராகுல்காந்தி உரை நிகழ்த்த இருக்கிறார்.
காங்கிர்ஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றபின், நடக்கும் முதல் மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக வாக்கு எந்திரங்களுக்குப் பதிலாக, வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவரவேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், ஒத்த கருத்துள்ள கட்சிகள் பிரச்சனைகளை மறந்து, ஓரணியில் திரண்டு தேர்தலைச் சந்திக்க வேண்டும். அப்போது மட்டுமே பா.ஜ.க.வின் தொடர் வெற்றிகளை சமாளிக்கமுடியும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.